ஹைதராபாத் : மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் 1986ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி கொச்சியில் பிறந்தார்.
பர்து பல்கலைக்கழகத்தில் வணிகவியல் நிர்வாகம் படித்த துல்கர் சல்மான், பேரி ஜான் ஸ்டுடியோவில் மூன்று மாதங்கள் நடிப்பு பயிற்சி பெற்ற பின், 2012ஆம் ஆண்டு செகண்ட் ஷோ (Second Show) என்ற மலையாள படத்தில் அறிமுகமானார்.
செகண்ட் ஷோ (Second Show) 2012
தற்போது மலையாளம், தமிழ் என மற்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார். இன்று 35ஆவது பிறந்தநாள் கொண்டாடும் துல்கர் சல்மானுக்கு செகண்ட் ஷோ (Second Show) அறிமுக படமே வெற்றி படமாக அமைந்தது. படத்தில் இளமை ததும்ப உள்ளூர் ஃமாபியாக ஹரி என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் துல்கர்.
ஒ காதல் கண்மணி (2015)
துல்கர் சல்மான்- நித்யா மேனன் நடிப்பில் 2015இல் தமிழில் வெளியான ஒ காதல் கண்கணி சக்கை போடு போட்டது. இது இவரின் தமிழ் அறிமுக படமும் கூட, இளசுகளை கட்டிப்போட்ட இப்படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். அந்தக் கால அலைபாயுதே ரேஞ்சுக்கு படம் பேசப்பட்டது.
இந்தப் படம் பாலிவுட்டில் ஓகே ஜானு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இதில் ஆதித்யா ராய் கபூர், ஷரதா கபூர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
சார்லி (2015)
மலையாள ரசிகர்களால் கொண்டாடப்படும் மற்றொரு துல்கர் சல்மான் படம் சார்லி. 2015ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் துல்கர்- பார்வதி இணைந்து நடித்திருந்தனர். பாக்ஸ் ஆபிஸிலும் இந்தப் படம் நல்ல பெயரை எடுத்துக்கொடுத்தது. பின்னாள்களில் மராத்தி, தமிழ் மொழிகளில் படம் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
மகாநதி (2018)
துல்கர் சல்மானின் தெலுங்கு அறிமுக படம் மகாநதி. இதில் சவாலான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று துல்கர் சல்மான் நடித்திருந்தார். இது காதல் மன்னன் ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம். இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது மட்டுமின்றி துல்கர் சல்மானின் நடிப்பும் பலரையும் கவர்ந்தது.
கார்வான் (2018)
துல்கர் சல்மானின் பாலிவுட் அறிமுக படம் இது. இந்தப் படத்தில் இர்ஃபான் கான், மிதிலா பால்கர் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. துல்கர் சல்மானின் நடிப்பு பலரும் பாராட்டப்பட்டது.
துல்கர் சல்மான் 2011ஆம் ஆண்டு அமல் சுஃபியா என்ற பெண்ணை மணந்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு குழந்தை உள்ளது.