சென்னை: ''வரனே அவசியமுண்ட'' என்ற மலையாள படக்குழுவினர் பிரபாகரன் பெயரை கொச்சைப்படுத்தியுள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் பெயர் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் கடுமையாக எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பிரபாகரன் பெயரில் கொச்சையான ஒரு காட்சி வைக்கப்பட்டு அது வரனே அவசியமுண்ட என்ற மலையாளத் திரைப்படத்தில் வெளிவந்துள்ளது. மரியாதைக்குரிய நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவர் "இந்தக் காட்சி தெரியாமல்தான் இடம்பெற்றுவிட்டது. கேரளாவில் அது பொதுப்பெயர் கூட" என்று முரண்பட்ட பதிலைச் சொல்லியிருக்கிறார். தெரியாமல் இடம்பெற்றுவிட்டது என்றால் அந்தக் காட்சியை அகற்ற வேண்டியதுதானே? ஏன் செய்யவில்லை?
ஒருவேளை அவர் அந்தப் படத்தில் நடித்தாரே தவிர, படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் எல்லாம் இருக்கும்போது, தன்னால் என்ன செய்ய முடியும் என்று நினைப்பாரானால், அவர்கள் கவனத்திற்கு இதைக் கொண்டு போவதற்கென்ன? நாங்கள் அந்தப் படக் குழுவினரின் மேல்மட்டத்தினருக்குச் சொல்லிக்கொள்கிறோம்.
ஒரு திரைப்படம் தயாரிப்பது என்றால் தனிமனிதர், சமூகம், நாடு, உலகம், இப்பேரண்டம் இவை குறித்தெல்லாம் மேலோட்டமாகவாவது தெரிந்திராமல் எப்படி? இந்தியாவில் கல்வியில் சிறந்த முதல் மாநிலம் கேரளாதானே! அப்படிப்பட்ட கேரளர்களுக்கு பிரபாகரன் என்பது தனிப் பெயர் அல்லாமல் பொதுப் பெயர் என்றால் தங்களின் பந்தபாச சகோதரர்களாகிய தமிழர்கள் யாம் அதை எப்படி நம்புவது?
மதிப்பிற்குரிய நடிகர் துல்கர் சல்மான் அவர்கள் இது குறித்து பொதுவெளியில் மன்னிப்புக் கோரியிருப்பது நாகரிகமானதே! அதைத் தமிழர்களாகிய நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். தவறு துல்கர் சல்மான் மீது இல்லை என்பதையும் நாங்கள் நன்கறிவோம். ஆனாலும் படத்தின் நாயகன் என்ற முறையில் அந்தக் காட்சியை அகற்ற தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தலாமே!
எனவே உடனடியாக அந்தக் காட்சியை நீக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம். படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இதில் மவுனமாக இருப்பது சரியில்லை. இதில் முழுப் பொறுப்பும் அவர்களுடையதுதான். உடனடியாக அந்தக் காட்சியை அப்புறப்படுத்துங்கள்; இல்லாவிட்டால் விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.