அஜித்தின் 60ஆவது திரைப்படமாக வெளியாகவுள்ள 'வலிமை' திரைப்படம் இன்று (டிசம்பர் 30) மாலை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ட்ரெய்லரில் படம் முழுக்கவே நடுங்க வைக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதை சிம்பாளிக்காக சொல்லும் வகையில் கை நடுங்கும் ஓபனிங் சீன் அமைக்கப்பட்டுள்ளது.
பின்னர் பேருந்தை துரத்தும் பைக் சேஸிங் காட்சியின் மூலம், படத்தயாரிப்பாளர் போனி கபூரின் பெயருக்கு அனல் தெறிக்கும் என்ட்ரி கொடுக்கப்படுகிறது. அர்ஜூன் அண்ணா எங்கமா? என இடம்பெறும் வசனக்காட்சியை அடுத்தே மாஸ் சண்டைக்காட்சி முடித்து என்ட்ரி தருகிறார், அஜித். இதனை வைத்தே கதாநாயகனின் பெயர் அர்ஜூன் என யூகிக்க முடிகிறது.
ட்ரெய்லரில் அஜித் முதல் வசனம்
பின்னணியில் காவல் துறையினர் சூழ நடந்து வரும்போதே, காவல்துறை உயர் அலுவலராக நடித்திருக்கிறார் அஜித் என முகத்தில் அறைந்தார்போல் அப்பட்டமாக தெரிவித்துள்ளது, ட்ரெய்லர். 'வறுமைல செஞ்சுட்டேன் சார்...' என குற்றவாளி ஒருவர் கதறுவது போல வடிவமைக்கப்பட்டுள்ள காட்சியிலேயே முதன்முறையாக வாய் திறக்கிறார், அஜித். 'ஏழையா இருக்கறவனெல்லாம் கேவலப்படுத்தாத...' என்பதே ட்ரெய்லரில் அஜித் பேசும் முதல் வசனம்.
திடீரென சென்னையில் நடைபெற்ற தற்கொலை ஒன்றை அஜித் விசாரிக்கும் காட்சிக்கு நகர்த்திச் செல்கின்றது, ட்ரெய்லர். அங்கிருந்தே கதைக்களம் சூடு பிடிக்கவுள்ளது என்பதை சுட்டிக்காட்டும் வகையில், அஜித்துடன் பயணிக்கிறார் ஹூமா குரேஷி.
'எப்படி பணம் சம்பாதிச்சோம்னு யாரும் பார்க்கப் போறதில்ல. எப்படி ஜெயிச்சோம்னு யாரும் தேடி பார்க்கப்போறதில்ல. ஜெயிக்கணும், பணம் சம்பாதிக்கணும் அவ்ளோதான்' என மிரட்டல் என்ட்ரி கொடுத்துள்ளார், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா.
கேமின் அடுத்த லெவல்
'வலிமை இருக்குறவன் அவனுக்கு என்ன வேணுமோ அத எடுத்துப்பான்' என கார்த்திகேயாவும், 'வலிமைங்கிறது அடுத்தவன காப்பாத்த தான் அழிக்க இல்ல' என அஜித்தும் பேசும் காட்சிகள் இரு வேறு பரிமாணங்களில் கதைக்களம் பயணிப்பதை எடுத்துரைக்கிறது.
மாஸ் வசனங்கள் இடம்பெற்ற அடுத்த நொடியே பைக் ரேஸிங் காட்சிகளும், துப்பாக்கிச் சண்டைகளும் ட்ரெய்லரை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. பின்பே அம்மா சென்டிமென்ட் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
'சமநிலை தவறும் ஒருத்தனோட கோபம் எப்படியிருக்கும்னு காட்டுறேன்' என அஜித் பேசும் நொடியில் திரையை ஆக்கிரமிக்கும் பைக் ஸ்டென்ட் காட்சிகள் காண்போரை பிரமிக்க வைக்கின்றன.
இறுதியில் கார்த்திகேயாவும், அஜித்தும் பைக் ரேஸில் மோதிக் கொள்ளும் காட்சிகள் இடம் பெற, "கேம் முடியல, அடுத்த லெவலுக்குப் போகப் போகுது" எனும் வசனம் இப்போதே திரைப்படத்தை பார்த்தாக வேண்டும் எனும் ஆசையை உள்ளூற பற்றவைக்கிறது.
ட்ரெய்லருக்கான யுவனின் பின்னணி இசை திரைப்பட வெற்றிக்கு இப்போதே மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. ட்ரெய்லர் வெளியீட்டுக்குப் பின்னர், பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் வலிமை திரைப்படத்துக்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடத்தில் தாறுமாறாக எகிறியுள்ளது.
இதையும் படிங்க: அஜித்தின் வலிமை ட்ரெய்லர் வெளியீடு!