தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அப்படி அளிக்கப்படும் நன்கொடைகள் ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், தடுப்பூசிகள், பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
முதலமைச்சரின் இந்த வேண்டுகோளையடுத்து திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் நிதியுதவி வழங்கிவருகின்றனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து முதலமைச்சர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.