தமிழில் ‘யாமிருக்க பயமே’ திரைப்படத்தை இயக்கிய டி.கே. இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், ‘காட்டேரி’. திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் நாயகனாக வைபவ் நடித்துள்ளார்.
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ராஜா தயாரித்துள்ள இப்படம் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாகப் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கரோனா இரண்டாம் அலை பரவிவருவதாக வெளியாகும் தகவல்களின் அடிப்படையில், எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது.
இப்போது நிலவும் குழப்பம் மற்றும் நிலையில்லாத்தன்மையைக் கருத்தில்கொண்டு காட்டேரி படத்தின் வெளியீட்டைத் தற்காலிகமாகத் தள்ளிவைக்கிறோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். கரோனா தாக்கம் குறைந்தவுடன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.