Corona Treatment: சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க இருக்கும் திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு இத்திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளதால், இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு முந்தையப் பணிகளுக்காக லண்டன் சென்றிருந்த வடிவேலு, அங்கு 10 நாட்கள் தங்கியிருந்தார். லண்டன் சென்று திரும்பிய அவருக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வடிவேலு ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது வடிவேலுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “டிசம்பர் 23ஆம் தேதி கரோனா காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த வடிவேலுவின் உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் அவர் சிகிச்சை முடித்து வீடு திரும்புவார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்பதால் வடிவேலுவின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஷாஜகான் பட இயக்குநர் உயிரிழப்பு