தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி, ரசிகர்களைக் கவர்ந்து சூப்பர் ஹிட்டானதுடன், அன்புவின் எழுச்சி தொடரும் என என்ட் கார்டு போட்டு அடுத்த பாகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மரண வெயிட்டிங்கை ஏற்படுத்திய படம் 'வடசென்னை'.
1985ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு இடையிலான சுமார் 15 ஆண்டுகளுக்கிடையேயான காலகாட்டத்தில் நடக்கும் கதை என்று கூறுவதைக் காட்டிலும், பல்வேறு கதாபாத்திரங்களுக்கு இடையே நிகழ்ந்த மோதல்கள், வாழ்க்கை முறையே 'வட சென்னை' என்று கூறுவது சாலப் பொருத்தமாக இருக்கும்.
நேர்வழியில் கதை சொல்லாமல் நான்-லீனியர் (non-linear) எனப்படும் பல்வேறு கதைகளுக்கும் சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்பை எடுத்துரைக்கும் விதமாக தெளிவான திரைக்கதை, அதற்கேற்ற பின்னணி இசைதான் படத்தை சீட் நுனியில் ஒவ்வொருவரையும் அமரவைத்தது எனலாம்.
வட சென்னை, தமிழில் வெளியான சிறந்த கேங்ஸ்டர் படம் என்று கூறுவதைக் காட்டிலும், இந்தப் படத்தின் பெயர் இல்லாமல் தமிழில் கேங்ஸ்டர் படம் லிஸ்ட் இல்லை என்று கூறும் அளவுக்கு கல்ட் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்ற படமாகத் திகழ்கிறது.
இந்நிலையில் இப்படம் சமூக வலைதளமான யூ-டியூப்பில் 'சென்னை சென்ட்ரல்' எனும் பெயரில் இந்தியில் டப் செய்யப்பட்டது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் தமிழில் பேசப்பட்ட வசனங்கள் அனைத்தும் அப்படியே இந்தியிலும் பேசப்பட்டது.
அதேபோல் தமிழில் காட்டப்பட்ட இடங்களையும் பெயர்களையும் மாற்றாமல் இந்தியிலும் அப்படியே காட்டியுள்ளனர். இதுவரை இப்படத்தை 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர்.
அதேபோல் கார்த்தி-ஹெச்.வினோத் கூட்டணியில் தமிழில் வெளியான பிளாக்பஸ்டர் படமான தீரன் அதிகாரம்-ஒன்று திரைப்படமும் இந்தியில் டப் செய்யப்பட்டது. வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டிற்குவரும் லாரி கொள்ளையர்களைப் பற்றி சுவாரஸ்யமான காட்சிகளுடன் இப்படம் வெளிவந்தது.
இவர்களைத் தேடி தமிழ்நாடு காவல் துறையினர் வட இந்தியாவிற்குப் பயணம்செய்யும்போது, அங்கு அவர்கள் சந்தித்த பிரச்சனைகளையும், அதை அவர்கள் எதிர்கொண்ட விதத்தையும் படத்தில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இப்படமும் தமிழில் பேசிய வசனங்களை அப்படியே இந்தியிலும் பேசியுள்ளனர். இப்படத்தையும் யூ-டியூப்பில் ஏராளமானோர் கண்டுகளித்துள்ளனர்.
சமீபத்தில் யூ-டியூப்பில் சிபிராஜ் நடிப்பில் வெளியான நாய்கள் ஜாக்கிரதை, சத்யா ஆகிய இரு தமிழ் படங்களும் இந்தியில் டப் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையையும் புரிந்துள்ளது. தொடர்ந்து கதையம்சம் கொண்ட தமிழ் படங்கள் சமூக வலைதளத்தில் இப்படி சாதனை பெற்று வருவது தமிழ் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.