கையில் காப்பு, ஸ்டைலிஷ் நடை, பார்த்த நொடியிலேயே காதல் (அவன் போலீசாக இருந்தாலும் சரி), புல்லட் மீதோ, துப்பாக்கியின் மீதோ பேரன்பு, இத்தியாதி இத்தியாதி என இருக்கும் ஆண்கள்தான் கௌதமின் 'நாயகன்'கள்.
'சத்யா'... அங்குதானே அவர் வாழ்க்கை தொடங்கியது? கமல்ஹாசனின் சத்யா என்ற ஒற்றைத் திரைப்படம்தான் கௌதமின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. அந்தப் படம்தான் ஃபிலிம்மேக்கராக வேண்டும் என்ற உந்துதலை கௌதமிற்கு கொடுத்தது.
ஏன், இன்று வரை அவர் கையிலிருந்து கழற்றாத காப்பையும் அவருக்கு கொடுத்தது. இப்படி ஒரு படத்தில் தொடங்கிய காதல்தான் இன்று வரை சினிமாவைக் காதலிக்கும், இனிமேலும் காதல் செய்யும் ஒரு இயக்குநரை தமிழ் சினிமாவிற்குப் பரிசாகக் கொடுத்தது.
காதல், காதலி, கவிதை, அப்பா, இசை இவை அனைத்தும் கௌதமிடமிருந்து பிரிக்கமுடியாத உணர்வுகள். இதுவரை கௌதம் அறிமுகம் செய்த இசையமைப்பாளர்கள் ஆகட்டும், கதாநாயகிகளாகட்டும் அவர்களது படம் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கு ஏற்படும் 'கிரேஸ்' அதன் பிறகு போகவே போகாது.
ஹாரிஸ் முதல் தர்புகா சிவா வரை, ரிமா சென் முதல் மேகா ஆகாஷ் வரை அனைவரும் கௌதமால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிசளிக்கப்பட்டவர்கள். இன்று வரை இவர்கள் அனைவரையும் ரசிகர்களால் கொண்டாடாமல் இருக்கமுடியவில்லை.
கவிதையென்றால் கௌதமிற்கு தாமரைதான். தனது கலையுலக வாழ்வில் 'வசீகரா' பாடலுக்குப் பிறகுதான் தாமரைக்கு ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. நம்மவருக்கு சினிமாவில் புதுமைகளைப் புகுத்திப் பார்ப்பதில் பேராவல் இருந்ததால், அதுவரை காதலனே காதலிக்கு மானே, தேனே என பாடிக்கொண்டிருந்த கிளிஷேக்களைத் தவிர்த்து புதியதாக காதலி காதலனுக்காக பாடும் பாடல் ஒன்றை உருவாக்கச் சொல்லியிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து உருவெடுத்த பாடல்தான் 'வசீகரா'. அதன் பின்பு பாடல் வரிகள் ஹாரிஸின் இசைக்கு ஒத்துப்போக கௌதமும் தாமரையின் பாடல் வரிகளில் கிறங்கிவிட்டார். அதன்பின்பு மற்ற சில பாடல்களையும் தாமரையையே எழுதச்சொல்லிவிட்டார் இயக்குநர். படம் வெளியான பிறகு 'வசீகரா' பாடலை பலரும் காலர் ட்யூனாக மாற்றிக்கொண்டார்கள், செல்போன் தலைகாட்டியப் பிறகு. தொடர்ந்து 'காக்க காக்க' திரைப்படத்திலும் தாமரைக்கு வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்து வந்த கௌதமின் படங்களிலும் தாமரையே பாடல்களைப் படைத்தார்.
கௌதமின் காதலிகளை இன்றுவரை ரசிகர்கள் காதலித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கென்றே ஒரு உலகத்தை தன் படங்களில் உருவாக்கினார் கௌதம். அவர்களுக்கென ஒரு குணாதிசயம் திரைப்படத்தில் இருக்கும். அதில் மாயா, ஆராதனா, மேக்னா, பிரியா, ஜெஸி, நித்யா, ஹேமானிக்கா என பலர் அடங்குவார்கள். உடனே காதலை சொல்லிவிடும் கதாநாயகனை போல் இல்லை இவர்கள், மாறாக பொறுத்திருந்து நாயகனை ரசிப்பார்கள், அவளுக்காக எவ்வளவு தூரம் வருகிறான், என்னென்ன செய்கிறான், என்னென்ன வர்ணனை பொழிகிறான், எவ்வளவு கண்ணியமாக நடக்கிறான் என அத்துணை ஆழத்தையும் கண்டுவிட்டுதான் தங்கள் காதலை வெளிப்படுத்துவார்கள்.
காதலை சொல்லுவதென்றால் வெறும் சொற்களால் மட்டுமல்ல. உள்ளத்தின் ஆழத்திலிருந்து அவர்களின் காதல் வெளிவரும். குறிப்பாக வேட்டையாடு விளையாடு திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். அக்மார்க் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான இப்படத்தில் விமான நிலையத்தில் சட்டென ஜோதிகாவிடம் ’கல்யாணம் பண்ணிக்கலாமா?’ என்று கமல் கேட்பார். அதிர்ச்சியில் எதுவும் கூறாமல் ஜோதிகா சென்றுவிடுவார். அதன் பிறகு இருவரும் சாலையில் சந்தித்துகொள்வார்கள். ”என்னைக்காவது பிடிச்சிருக்குன்னு தோணுச்சின்னா போன் பண்ணி சொல்லுங்க” என்று கமல் கூறி முடிப்பதற்குள் ”பிடிச்சிருக்கு இப்பவே சொல்றேன் பிடிச்சிருக்கு...” என்பார் ஜோதிகா. அங்குதான் மாயாஜாலத்தை உருவாக்குவார் கௌதம்.
இன்னும் சில மெய்சிலிர்க்கவைக்கும் பிரப்போஸல் காட்சிகளாக 'காக்க காக்க' திரைப்படத்தில் அன்புச்செல்வனிடம் மாயா காதலைத் தெரிவிக்கும் காட்சி, 'வாரணம் ஆயிரம்' படத்தில் மேக்னா காதலைத் தெரிவிக்கும் காட்சி, கார்த்திக்கிடம் ஜெஸ்ஸி காதலைத் தெரிவிக்கும் காட்சி போன்றவை இன்றுவரை இளம் தலைமுறையினரின் ஸ்டேட்டஸிலும், புரொஃபைல் பிக்சர்களிலும் இடம் பிடித்துள்ளன. ஆண்டுகள் கடந்தும் கௌதமின் ரசிகர்கள் அவருக்கு திரும்பகொடுக்கும் அன்பு இதுதான்.
மற்ற இயக்குநர்களுக்கு அம்மாதான் உணர்ச்சி என்றால், கௌதமுக்கு அதற்கும் மேல் உயிராய் இருப்பது அப்பாதான். அதற்காகவே தன் அப்பாவுடனான தனது நெருக்கத்தை 'வாரணம் ஆயிரம்' திரைப்படத்தில் கிருஷ்ணன் பாத்திரம் மூலம் பிரதிபலித்திருந்தார். சினிமா ஹீரோக்களைவிட அப்பாதான் நிஜமான ஹீரோ. நிஜமாகவும் நிழலாகவும் வருபவர். இப்படியொரு அப்பா தனக்கு கிடைக்கமாட்டாரா என பலரும் பார்த்து ஏங்கும் கிருஷ்ணனை சூர்யாவின் தந்தையாக கொடுத்தவர் கௌதம். தன் தந்தையுடனான தனது நினைவுகளை, அவருக்கு அர்ப்பணிக்கும் வண்ணமாகவே 'வாரணம் ஆயிரம்' அமைந்தது.
தன் கல்லூரிக் காதலியை தந்தை எப்படி காதலித்து திருமணம் செய்துகொண்டாரோ அதையே இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டு பார்த்த மாத்திரத்திலேயே மேக்னாவிடம் காதலை வெளிப்படுத்துகிறான் சூர்யா. ஒரு மெல்லிய பீஃல் குட் படமாக, காட்சி நாவலாகவே வாரணம் ஆயிரம் அமைந்தது. சூர்யாவுடன் நாமும் காதலை உணர்வோம். அனைத்து வெற்றி தோல்விகளிலும் அவனுக்கு ஆறுதலாகவும், அணைப்பாகவும் இருப்பது கிருஷ்ணன் மட்டுமே. தான் சாவதற்கு முன்னால்கூட மேல் மாடியில் இருக்கும் சூர்யாவை பார்த்துவிட்டு தன் அறைக்கு கிருஷ்ணன் செல்வார், தன் இறுதி மூச்சை விட! தந்தை என்றால் நிச்சயம் கிருஷ்ணன் அனைவர் மனதிலும் இடம்பிடித்திருப்பார்.
காதல், கவிதை இரண்டும் கலந்த கவிதைதான் கௌதமின் படைப்பு. இன்னும் எத்துனை காதல் படங்கள், காப் (போலீஸ்) படங்கள் வந்தாலும் கௌதமின் அந்தக் காட்சிமொழி, வசனங்களுக்கு ஈடாகாது. கௌதமின் எந்தப் படைப்பை எடுத்துக்கொண்டாலும் அதில் அவர் தன் வாழ்வின் பக்கங்களை தீட்டிக்கொண்டேதான் இருப்பார். 20 ஆண்டுகளுக்கு முன் திரைத்துறைக்கு இயக்குநராக அறிமுகமாகி, இன்று நடிகனாய் கலக்கிக்கொண்டிருக்கும் கௌதமுக்கு நம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு, ரகுமான் சிம்புவுடனான அவரது அடுத்த காதல் எபிசோடுக்காக காத்திருப்போம்...
இதையும் படிங்க... 'விண்மீன்கள் தாண்டியும் வாழும் காதல் இது' 10YearsOfVinnaithaaandiVaruvaayaa