என்னது திரிஷாவுக்கு 36 வயதா? என்று ஆச்சரியப்படுவீர்களே ஆனால் நீங்களும் ரசனை நிறைந்தவர்தான் என்பதை நினைவில் நிறுத்திடுங்கள்.
சூர்யாவுக்கு ஜோடியாக ‘மெளனம் பேசியதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான திரிஷாவுக்கு அன்றிலிருந்து ஏறுமுகம்தான். அந்தப் படத்தில் ‘சந்தியா - கெளதம்’ ஜோடிக்கு இருந்த கெமிஸ்டிரி 2018 அக்டோபரில் வெளியான ‘ராம் - ஜானு’ காதல்வரை சுவை குறையாமல் அப்படியே இருந்தது என்றால் அது மிகையல்ல. அங்கு கெளதமாக ‘சூர்யா’... இங்கு ராமாக ‘விஜய் சேதுபதி’!
‘ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை’ என்ற சொற்றொடருக்கு சரி நிகரான எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் என்ற பெருமை, அரசியல் உலகில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எந்த அளவுக்கு பொருத்தமான ஒன்றாக இருந்திடுமோ, அதற்கு சற்றும் குறைவின்றி திரையுலகில் திரிஷாவை ஒப்பிடலாம்.
திமுக ஆட்சியின்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நேர்ந்த அநீதியின் எதிரொலியே அவரை பின் நாட்களில் முதலமைச்சர் நாற்காலிக்கு அழைத்துச் சென்றது என்பது அனைவரும் அறிந்ததே.
அதேபோல், ‘இந்தப் படத்துடன் காணாமல் போய்விடுவார்’, ‘இந்தப் படத்துடன் அவரின் கெரியர் முடிந்துவிட்டது’, இனி திரிஷா படமெல்லாம் நடிக்க மாட்டாருப்பா’, ‘திரிஷாலாம் ஆன்ட்டி ஆயிருச்சுயா’, ’இனிமே நடிச்சா அம்மாதான்’ என தொடர்ந்து சிலர் சேறுகளை வீச வீச தன்னை மெருகேற்றிக்கொண்டே வந்த திரிஷா, இன்றளவும் முதல் தர ஹீரோயின்களில் ஒருவராக தன்னை நிலை நிறுத்தியுள்ளார்.
ஜெயலலிதாவின் வாழ்வியல் எப்படி ரகசியத்துடனும், தனிமைகள் நிறைந்ததுமாகவும் இருந்ததோ, அதுபோல்தான் இவருடையதும்! இருவருக்குள்ளும் இருக்கும் மற்றொரு ஒற்றுமை, இருவருமே ’சர்ச் பார்க்’ பள்ளியில்தான் பயின்றனர். அவரின் பயோபிக்கில் நடிக்க வேண்டும் என்பதே தனது ஆசை என கூறியுள்ள திரிஷாவின் ட்விட்டர் பக்கத்தின் முகப்பு புகைப்படத்தில் இன்றும் ஜெயலலிதாதான் மின்னிக் கொண்டிருக்கிறார்.
ஏனெனில், கடின உழைப்புகள் பெரிய அளவில் அங்கீகரிக்கப்படாத இந்தத் தமிழ் திரையுலகில் பயணித்துக் கொண்டிருக்கும் திரிஷா போன்ற சீனியர் நடிகைகளுக்கு, திரைத்துறையில் மட்டுமின்றி பின் நாட்களில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் ஆட்சி செய்த ஜெயலலிதா என்றுமே சூப்பர் சீனியர்தான்!
உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டால் ஒரே வார்த்தையில் ‘அம்மா’ என பதில் தரும் திரையுலகின் ஜெயலலிதா திரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!