'ஷாமன்' என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாகிவரும் படம் 'தொரட்டி' இந்த படத்தில் சத்தியகலா என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் கதாநாயகி திடீரென மாயமானார்.
இது தொடர்பாக பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்த பட தயாரிப்பு நிறுவனம், புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், ”சினிமாவில் நடிப்பது தன்னுடைய தந்தை மற்றும் வளர்ப்பு தாய்க்கு பிடிக்காததால் தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக தனக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக படக்குழுவினரிடம் சத்தியகலா தெரிவித்திருந்தார். சென்னையில் சத்தியகலா வசித்துவந்த வீட்டில் தற்போது யாரும் இல்லாத நிலையில் அவரின் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால் அவரை தொடர்புகொள்ள முடியாத நிலையில் பட நிறுவனம் உள்ளது.
எனவே குடும்பத்தினரால் கடத்தப்பட்ட சத்தியகலாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.
மேலும், இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் இந்து கருணாகரன், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், நிர்மல்குமார் அடங்கிய அமர்வில் முறையிட்டார். ஆனால் இந்த மனுவை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.