சென்னை ரயில் நிலையத்தில் சுவாதி எனும் பெண் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ’சுவாதி கொலை வழக்கு’ எனும் படத்தை உளவுத்துறை, கலவரம், ஜனனம் உள்ளிட்ட படங்களை இயக்கிய டி. ரமேஷ் செல்வன் இயக்கினார். இந்தத் தலைப்புக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், படத்தின் பெயர் ’நுங்கம்பாக்கம்’ என மாற்றப்பட்டது. தற்போது இந்தப் படம் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தை வெளியிட தலித் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
’நுங்கம்பாக்கம்’ படத்தை பார்த்தேன். இதுவரை கிடைத்த தகவல்கள், ஆதாரங்கள், காவல்துறை மற்றும் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துகளைக் கொண்டு படத்தின் கதையை பின்னியிருக்கிறார். எனினும் சில மாற்றுக் கருத்துகளும் படத்தில் உள்ளன. குறிப்பாக கொலையை ராம்குமார் தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்திருந்தோம். அந்தக் கொலையை கண்டித்தோம். சுவாதியின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறினோம். அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், அப்போதுதான் உண்மை வெளிவரும் என்றும் கூறினோம். இந்த வாதங்கள் அனைத்தும் திரைப்படத்தில் பதிவாகி இருக்கிறது.
ராம்குமார் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிற சூழல் இருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு இஸ்லாமிய இளைஞரோடு பழக்கம் இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட பல கருத்துக்கள், வெளியிலே பேசப்படுகிற, விவாதிக்கப்படுகிற கருத்துக்கள் அல்லது ராம்குமாருக்கு ஆதரவாக பேசப்படுகிற கருத்துக்கள் அனைத்தும் ஒன்று கூட விடாமல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
படம் முடியும்போது ராம்குமார் கொலையாளி என்று நிரூபிக்கக் கூடிய வகையில் உள்ளது. அதில் எனக்கு உடன்பாடில்லை.
சுவாதி கொலையின் பின்னணியில் இன்னும் பல மர்ம முடிச்சுகள் இருப்பதாக நான் கருதுகிறேன். அலுவலர்கள், ஆட்சியாளர்கள் அந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்கள். ராம்குமாருடைய சாவும் சந்தேகத்திற்கு உரியதுதான் என்பது என்னுடைய நிலைப்பாடு. விடுதலைச் சிறுத்தைகளின் கருத்தும் கூட. படம் முடியும்போது இன்ஸ்பெக்டர் கேரக்டர் வழக்கு குறித்து ஆய்வை அறிக்கையாக தயாரித்துக் கொண்டிருக்கிறபோது, ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் கிடைத்ததும் அவர் அதிர்ச்சி அடைந்து புழல் சிறைச்சாலைக்கு ஓடி சிறைச்சாலை கண்காணிப்பாளரிடத்திலே சண்டை போடுகிறார். அவரை பாதுகாப்பாக கண்காணித்திருக்க வேண்டும்.
பொதுமக்கள் ராம்குமார் குற்றவாளி இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் சூழலில் அது உண்மை என்று நிரூபிக்கக் கூடிய வகையிலே இப்படி முடிந்துவிட்டதே இதற்கு சிறை நிர்வாகம் தானே பொறுப்பு என்று பேசுவது போன்ற காட்சியும் இருக்கிறது.
முற்றும் முழுதாக அவரே குற்றவாளி என்று நிரூபிக்கிற முயற்சியில் இயக்குநர் ஈடுபடவில்லை. இருதரப்பிலும் உள்ள வாதங்களை, பேசப்படுகிற நியாயங்களை, அலுவலர்கள் தரப்பிலே சொல்லப்படுகிற கருத்துக்களையும், ராஜ்குமார் குடும்ப தரப்பில் சொல்லப்படுகிற வாதங்களையும் தவறாமல் இயக்குநர் வைத்திருக்கிறார். அந்த வகையிலே அது ஆறுதலைத் தருகிறது.
காவல்துறை எப்படி விசாரணை நடத்தும். சிறைத்துறை எப்படி கைதிகளை நடத்தும். ஊடகங்கள் எப்படி செய்திகளை சேகரிக்கும் அல்லது எப்படி வெளியிடும், இவற்றையெல்லாம் பொதுமக்களுடைய பார்வைக்கு தத்ரூபமாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.ஆனாலும், அடிப்படை கருத்திலேயே எனக்கு மாறுபாடு இருக்கிறது. அதாவது காவல்துறை சுவாதி கொலை வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது. ராம்குமார்தான் குற்றவாளி என்று அவர்களால் நிரூபிக்க முடியவில்லை.
மொத்தத்தில் இந்தப் படம் மக்களிடையே நீண்ட விவாதத்தை நடத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது. அதிகார வர்க்கத்தை புரிந்து கொள்வதற்கு, இப்படிப்பட்ட குற்றப் போக்குகளைப் புரிந்து கொள்வதற்கு, சமூக உளவியலை அறிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில், இளம் தலைமுறையினர் விவாதிக்கிற வகையில் இந்த படத்தை இயக்குனர் எடுத்திருக்கிறார். மற்றபடி, விடுதலை சிறுத்தைகளுக்கு இந்த திரைப்படத்தில் வேறு எந்த முரண்பாடும் இல்லை என்றார்.