உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறளுக்கு எத்தனையோ விளக்க உரைகள் கொண்ட வீடியோக்கள், அனிமேஷன் படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவை முழுமையாக மக்களிடம் போய் சேர்ந்ததா என்பது சந்தேகம்தான். இந்நிலையில், உலகமே போற்றும் திருக்குறளை இளையதலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் விதமாக பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 'பொம்மியும் திருக்குறளும்' என்ற நிகழ்ச்சியை கஸ்டோ ஸ்டுடியோஸ் சுட்டி டிவியுடன் இணைந்து தயாரித்துள்ளது.
திருக்குறளின் நன்னெறி கருத்துகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் புரியும்படி எடுத்துரைக்க பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், பேராசிரியருமான ஞானசம்பந்தன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் சாராம்சமே தினம் ஒரு திருக்குறளை, குழந்தைகள் மனதில் பதிய வைக்க கார்ட்டூன் கேரக்டர்களுடன் இணைந்து பேராசிரியர் ஞானசம்பந்தன் எடுத்துரைப்பார். இதில் அவருக்கே உரிய பாணியில் நகைச்சுவை கலந்து எளிய முறையில் கார்ட்டூன் பாத்திரங்களுடன் உரையாடுவார் என கூறப்படுகிறது.
மேலும், இதுகுறித்து சுட்டி சேனல் குழுமத்தின் நிகழ்ச்சிப் பிரிவு தலைவர் கவிதா ஜாபின் கூறுகையில், 'திருக்குறளை அடுத்த தலைமுறைக்கு எளிதாகக் கொண்டு சேர்க்கும் முயற்சிதான் பொம்மியும் திருக்குறளும். திருக்குறளை குழந்தைகள் மீது திணிக்காமல் அனிமேஷன் மூலம் எளிதான முறையில் கற்பிக்க இருக்கிறோம். இதற்கு கஸ்டோ ஸ்டுடியோ 1330 குறள்களையும் முழுமையான அனிமேஷன் சித்திரங்களாக தர இருக்கிறது. கருத்து, கதை, காமெடி அரட்டை அனைத்தையும் கலந்து ஒவ்வொரு குறளையும் 6 நிமிட எபிசோடாக வழங்க இருக்கிறோம்' என அவர் தெரிவித்தார்.