தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள், புறநகர் ரயில்கள் இயங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற நவம்பர் 10ஆம் தேதி முதல் திரையரங்கு திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் 50 விழுக்காடு இருக்கைகளுடன் மட்டும் செயல்பட வேண்டும். வணிக வளாகங்கள், மல்டிபிளக்ஸ் வளாகங்களில் உள்ள திரையரங்குகளுக்கும் 50 விழுக்காடு இருக்கை விதி பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறுகையில், "கடந்த ஏழு மாதங்களாக தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் முதலமைச்சரின் இந்த அறிவிப்பு புத்துணர்ச்சி அளித்துள்ளது. 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறந்தாலும் மகிழ்வுடனே தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் இந்த அறிவிப்பை எதிர்கொள்கிறோம்.
பொதுமக்கள் கோயில்கள், கடைத்தெருவுக்கு செல்வது போன்று அச்சமின்றி திரையரங்கத்திற்கு வர வேண்டும். இதனால், பொங்கல் தினத்தன்று பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானரி மரணம்