சென்னை போரூர் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழர்களின் விரோதத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும், நடிகர் விஜய்சேதுபதியின் நலன் கருதியும், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 800இல் நடிக்க வேண்டாம் என அறிவுறுத்தினேன். இதுதொடர்பாக, விஜய்சேதுபதியிடமும் கேட்டு கொண்டேன். ஆனால், விஜய் சேதுபதிக்கு எதிராக நான் இருப்பதாகக் கூறி, செய்திகள் சித்தரிக்கப்படுகின்றன.
சமூக வலைதளம், வாட்ஸ் அப், செல்போனிலும் தொடர்ந்து ஆபாசமாக திட்டுகின்றனர். கடந்த ஐந்து நாள்களாக, வாட்ஸ் அப் மூலமும், செல்போனிலும் தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. வாட்ஸ்-அப் மெசேஜ் மூலமாக, எனக்கு நள்ளிரவில் அச்சுறுத்தல் வருகிறது. ஆபாசமாகப் பேசுகின்றனர். என்ன நோக்கத்துக்காக, இதுபோன்று செய்கின்றனர் என்பது தெரியவில்லை.
விஜய் சேதுபதி ரசிகர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடமாட்டார்கள், அவர்கள் மிரட்டவும் வாய்ப்பில்லை. அவர்கள் எனது தம்பிகள். மிரட்டல்கள் தொடர்பாக, காவல்துறையினரிடம் விரிவாக புகார் அளிக்கவுள்ளேன். குடும்பத்தினருடன் வசிக்கும் எனக்கு இதுபோன்ற மிரட்டல்கள் தொடர்ந்து வருவதால், முதலமைச்சர் கவனத்துக்கு உடனே கொண்டு செல்ல விரும்பினேன். யார் இதுபோன்று செயல்களை செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாக, "என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்" என ட்விட்டரில் சீனு ராமசாமி பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.