சென்னை: அண்மையில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் இளைஞர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய மலையாள படம், 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. ஜோ பேபி இயக்கிய இப்படத்தில், சூரஜ் வெஞ்சரமுடு, நிமிஷா சஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
100 நிமிடங்கள் மட்டும் ஓடக்கூடிய இப்படம், குடும்பம் என்கிற அமைப்பு எப்படி பெண்ணின் உழைப்பைச் சுரண்டுகிறது என்பதையும், இந்தியப் பெண்களின் வாழ்வியல் முறையையும் அழுத்தமாக பதிவு செய்திருந்தது.
இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக் உரிமையை இயக்குநர் ஆர். கண்ணன் பெற்றுள்ளார். 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தில் நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பாலசுப்பரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு சவரிமுத்து, ஜீவிதா சுரேஷ்குமார் ஆகியோர் வசனம் எழுதுகின்றனர். இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: திரையில் 'மாஸ்டர்' - சமூகவலைதள கொண்டாட்டத்தில் 'தளபதி' ரசிகர்கள்!