இந்தியில் அமிதாபச்சன் நடிப்பில் 'பிங்க்' என்னும் தலைப்பில் வெளியான திரைப்படம் தமிழில் அஜித் நடிப்பில் 'நேர்கொண்ட பார்வை' என்னும் பெயரில் வெளியாகிறது. படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்திருக்கிறார். முதல் முறையாக அஜித் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பது அனைவரிடத்திலும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இதையடுத்து, நயன்தாரா நடிப்பில் 'கொலையுதிர் காலம்' திரைப்படம் பல பிரச்னைகளுக்கு பிறகு 9ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. படம் முழுக்க நயன்தாராவை மையப்படுத்தி த்ரில்லர் ஜானரில் அமைந்திருக்கும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இப்படம் இந்தியிலும் வெளியாகிறது. பாலிவுட்டில் நயன்தாரா கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். இந்தியில் 'காமோஷி' என்ற பெயரில் வெளியாகிறது.
இந்நிலையில் அஜித்தின் நேர்கொண்ட பார்வையும், நயன்தாராவின் கொலையுதிர் காலமும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகவிருப்பதால் இருவரது ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் இருவருமே முன்னணி நடிகர், நடிகைளாக வலம் வருபவர்கள். இவர்களது இப்படம் அடுத்தடுத்த நாட்களில் வெளியாவதால் இரு படங்களுக்குமிடையே கடும் போட்டி நிலவும் சூழல் அமைந்துள்ளது.