ஹைதராபாத்: பாலிவுட், கோலிவுட்டில் சூப்பர் ஹிட்டானதைத் தொடர்ந்து டோலிவுட்டில் 'பிங்க்' ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
பாலிவுட்டில் 'பிங்க்' என்ற பெயரிலும், கோலிவுட்டில் 'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரிலும் வெளியான இந்தப் படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இந்தியில் அமிதாப் பச்சன் நடிக்க, தமிழில் அஜித்குமார் நடித்திருந்தார். இதையடுத்து இவ்விரு மொழி ரசிகர்களும் படத்தை கொண்டாடினர்.
இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதன் புகைப்படம் தற்போது லீக்காகி வைரலாகியுள்ளது.
படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. நடிகை அஞ்சலி, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அத்துடன், பவன் கல்யாணின் பல படங்களுக்கு வசனம் எழுதிய திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இந்த திரைப்படத்திற்கும் வசனம் எழுத இருப்பதாகக் கூறப்படுகிறது.
மூன்று பெண் தோழிகளுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல்களையும், அந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்திருக்கும் உண்மை நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு 'பிங்க்' படத்தின் கதை அமைந்திருக்கும். 2016ஆம் முதன்முதலாக இந்தியில் வெளியான இந்தப் படம் அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பட லிஸ்டில் இணைந்தது.
இதைத்தொடர்ந்து தமிழில், அஜித் நடிக்க, ஹெச். வினோத் இயக்கத்தில் கடந்த ஆண்டு 'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் 'பிங்க்' திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. தமிழிலும் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் மழை பொழிந்து ஹிட்டானது.
இதையடுத்து தற்போது தெலுங்கில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்படத்தொடங்கியுள்ளது.