நடிகர் அயுஷ்மன் குர்ரானா, நடிகைகள் தபு, ராதிகா ஆப்தே உட்பட பலர் நடித்து இந்தியில் ஹிட்டான படம், ‘அந்தாதுன்’. பிளாக் காமெடி கிரைம் த்ரில்லராக உருவான இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார். சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை ஆகிய முன்று பிரிவுகளில் விருது வாங்கியது.
அதேபோல் சமீபத்தில் நடைப்பெற்ற மெல்போர்ன் திரைப்பட விழாவிலும் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த படம் ஆகிய பிரிவுகளிலும் விருது வாங்கியது.
இந்நிலையில் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கான உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியுள்ளார். இதுகுறித்து தியாகராஜன் கூறுகையில், அந்தாதுன் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. பிரஷாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பதாலும், நல்ல கைத்தேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்த கதாபாத்திரம் அவருக்கு பொருத்தமாக இருக்கும்.
தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ள இப்படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்படத்திற்கான இயக்குநர், நடிகை, பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைப்பெற்று வருகிறது. படக்குழு முடிவானவுடன் விரைவில் படப்படிப்பை தொடங்க இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே தியாகராஜன், இயக்குநர் ஸ்ரீராம் ராகவனின் ’ஜானி கட்டார்’ திரைப்படத்தை பிரஷாந்த் நாயகனாக நடிக்க ’ஜானி’ என்ற பெயரில் ரீமேக் செய்தது குறிப்பிடத்தக்கது.