தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர் மகேந்திரன். தனது எதார்த்தமான கதையாலும், காட்சியமைப்பாலும் ரசிகர்களின் மனதில் அழுத்தமாக இடம்பிடித்த மகேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார்.
இந்நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இயக்குநர்கள் சங்கத்தில் இயக்குநர் மகேந்திரனின் திருவுருவ படத்திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநர்கள் பேரரசு, கண்ணன், மனோபாலா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மகேந்திரனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து, இயக்குநர் பேரரசு பேசுகையில், மறைந்த இயக்குனர் மகேந்திரன் பெயரில் இயக்குநர் சங்கம் சார்பில் விருது ஒன்று வழங்கப்படும்.
இதுபோன்று தமிழ்நாடு அரசு சார்பில் மகேந்திரன் பெயரில் புதிதாக விருது ஒன்றை உருவாக்க வேண்டும் என திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பாக அரசிடம் வலியுறுத்த இருப்பதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் கண்ணன் பேசுகையில், ’இயக்குநர் மகேந்திரன் முதலாளித்துவத்தை விரும்பாத கம்யூனிஸவாதியாக இருந்ததால்தான் அவரிடம் பணியாற்றிய உதவி இயக்குநர்களைச் சிறப்பாக நடத்தியதுடன் , உரிய அங்கீகாரமும் பெற்றுத் தந்தார்’ என்றார்.