நடிகர் விஜய், 'பிகில்' பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்த விவரங்கள் வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக வருமான வரித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழத் திரையுலகில் முக்கிய புள்ளிகளாக திகழும் நடிகர் விஜய், விநியோகஸ்தர், ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவன தயாரிப்பாளர், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த புதன்கிழமை முதல் வருமான வரித்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டது.
சென்னை, மதுரை உட்பட சுமார் 38 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், பைனான்சியர் அன்புசெழியனுக்குச் சொந்தமான இடங்களில் கணக்கில் வராத 77 கோடி ரூபாய் கைபற்றப்பட்டன. அத்துடன் ஏராளமான ஆவணங்கள், உறுதிமொழி பத்திரங்கள், பின்தேதியிட்ட காசேலைகளும் கைபற்றப்பட்டன.
தற்போது வரை கிடைக்கப்பட்ட ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது மறைத்துவைக்கப்பட்ட சொத்துக்கள், பணத்தின் மதிப்பு சுமார் 300 கோடி ரூபாயை தாண்டும் என தெரிகிறது. இந்த சோதனையின் ஒரு பகுதியாக விநியோகஸ்தர் பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளராகவும் திகழ்கிறார். அவரது நண்பர் வீட்டில் மறைத்துவைக்கப்பட்ட பல்வேறு ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து சோதனையில் கைபற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருகிறது. அதேபோல் தயாரிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் செலவு கணக்கு, நடிகர் மற்றும் படத்தில் பணியாற்றியவர்களுக்கான சம்பள விவரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
நடிகருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் பணம் ஏதும் கைபற்றப்படவில்லை. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அசையா சொத்துகளில் அவர் செய்திருக்கும் முதலீடுகள், தயாரிப்பாளரிடம் பெற்ற சம்பள விவரங்கள் குறித்து விசாரிக்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து, விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்ததாக கூறப்பட்டது. அத்துடன் அந்த ஆண்டில் அதிகம் வசூலித்த படமாகவும் அமைந்தது. இதன் அடிப்படையில் படத்தில் தொடர்புடையவர்களிடம் வரி ஏய்ப்பு நிகழ்திருக்கிறதா என்பதை கண்டறிய வருமான வரி சோதனை நடைபெற்றதாக பேசப்படுகிறது.
சுமார் 24 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையானது நேற்று இரவுடன் நிறைவுபெற்றது.