வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டியநாடு, மாவீரன் கிட்டு உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம்வருபவர் சுசீந்திரன். இந்த ஆண்டு இவர் இயக்கத்தில் கென்னடி கிளப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இதனிடையே இவரது மற்றொரு படமான சாம்பியன் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதிகட்ட பணியில் உள்ளது. களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் விஷ்வா, டப்ஸ்மேஷ் புகழ் மிருணாளினி, மனோஜ் பாரதி ராஜா, நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிசாசு படப்புகழ் அரோல் கொரோலி இசையமைக்கிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஏற்கனவே சுசீந்திரன் கபடி, கிரிக்கெட் விளையாட்டுக்களை கதைக்களமாக வைத்து இயக்கிய ஜீவா, வெண்ணிலா கபடிகுழு, கென்னடி கிளப் படங்களில் வெற்றியைத் தொடர்ந்து இந்தமுறை கால்பந்தாட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்.
இந்த படம் பற்றி நீண்ட நாட்களாக எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது இறுதிகட்டப்பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. இதனிடையே தற்போது விரைவில் படம் வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சாம்பியன் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.