நடிகர் சூர்யா 'சூரரைப் போற்று' படத்தில் நடித்துள்ளார். ஏர் டெக்கானின் நிறுவனரான ஜி.கே.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து, சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இத்திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் டீஸரும், மாறா தீம் சாங்கும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில், 'வெய்யோன் சில்லி' என்ற பாடல் பறக்கும் விமானத்தில் வைத்து வெளியிடப்படும் எனவும், இதுவரை விமானத்தில் செல்லாத 100 சிறுவர், சிறுமிகள் விமானத்தில் முதல்முறையாக அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று 100 சிறுவர், சிறுமிகள் விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சூர்யா,' 20 ஆண்டுகளுக்கு முன் நம் மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டினர் மட்டுமே பயணிக்க முடியும்.
ஒரு மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால், அங்கு விமான நிலையம் இருக்கிறதா எனக் கேட்பார்கள். அப்படிப்பட்ட சூழலில் விமானப் போக்குவரத்தை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்தது கோபிநாத். ஒரு ரூபாய்க்கு விமான டிக்கெட் கொடுத்து விமானப் போக்குவரத்தில் பெரிய புரட்சி செய்தவர், அவர்.
முதல்முறையாக விமானப் பயணம் செய்வதற்கு, அவர்களின் கனவுகள் குறித்து கட்டுரை எழுதச் சொன்னோம். அதில் அரசுப் பள்ளி மாணவர்கள் 100 பேருக்கு மேல் வென்றனர். அவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களையும், உடன் பிறந்தவர்களையும் இதில் பங்கேற்க வைத்தனர். முதல்முறையாக விமானத்தில் பறந்தவர்கள், இன்னும் பல விமானங்களில் பறப்பார்கள். 'சூரரைப் போற்று' எனக்கு முக்கியமான திரைப்படம்' என்றார்.