இயக்குநர் மகேந்திரன் பிறந்த நாளான இன்று( ஜூலை 25), சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் மகேந்திரனுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து ஒரு ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோவில் ரஜினிகாந்த், 'முள்ளும் மலரும்' படத்தில் மக்கள் என்னை புகழ்ந்து பேசினார்கள் என்றால் அதற்கு முழு காரணம் மகேந்திரன் தான். அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவர் மிகவும் வித்தியாசமான மனிதர். அவர் திறமை பற்றி நான் சொல்லத் தேவையில்லை.
அவர் எப்போதும் காசு, பணம், புகழ் போன்றவற்றை விரும்பமாட்டார். அவர் விரும்பியது எல்லாம் தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே. அதற்காக மட்டுமே உழைத்தார்.
சினிமாவை அணுஅணுவாய் ரசித்தவர், நேசித்தவர். அவருடைய 'உதிரிப்பூக்கள்' படத்தை நான் பார்க்கவில்லை. சமீபத்தில் கரோனா விடுமுறையில் அந்தப் படத்தை நான் பார்த்தேன். இறுதியில் எழுந்துநின்று என்னையறியாமல் கை தட்டினேன்.
அற்புதமான படைப்பு. இவ்வளவு நல்ல கலைஞன் நம்மை விட்டு சென்று விட்டார். நான் 'பேட்ட' படத்தில் அவருடன் சேர்ந்து நடித்தது எனது பாக்கியம். அந்தப் படப்பிடிப்பில் அவருடன் அதிக நேரம் செலவிட்டு உள்ளேன். அதிகம் பேசி உள்ளேன்.
இப்படிப்பட்ட நல்ல கலைஞர் நம்மை விட்டு இவ்வளவு சீக்கிரம் பிரிந்து விடுவார் என்று நான் நினைக்க கூட வில்லை. இந்த நாளில் அவரை நினைவு கூர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி” என்று அந்த ஆடியோ பதிவில் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திரைப் பயணத்தை சிறப்பித்த ரசிகர்களுக்கு நன்றி' - நடிகை ஸ்ருதி ஹாசன்!