சென்னை: விஜய் சேதுபதி, சமந்தா, ஃபஹத் பாசில், ரம்யா கிருஷ்ணன், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' ஆஸ்திரேலியாவில் விருது வாங்கியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை தியாகராஜா குமாரராஜன் இயக்கியிருந்தார். நான்கு வெவ்வேறு கதைகள் ஒரே கதையாக இணைத்து மிகவும் வித்தியாசமான பாணியில் அமைந்திருந்த இந்தப் படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
விமர்சக ரீதியாக பாராட்டைப் பெற்ற இந்தப் படம், வசூலிலும் கலக்கியது. படத்தில் திருநங்கையாக தோன்றிய விஜய் சேதுபதியின் நடிப்பு மிரளவைக்கும் விதமாக இருக்கும். இதேபோல் சமந்தா, ஃபஹத் பாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி ஆகியோரின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்தப் படத்துக்கு பாடல்கள் இல்லை. பின்னணி இசை உலகத்தரத்துக்கு இருந்ததாகக் கூறப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படமாக சூப்பர் டீலக்ஸ், சிறந்த நடிகராக விஜய் சேதுபதி என இரண்டு விருதுகள் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அகாதெமி ஆஃப் சினிமா அண்ட் டெலிவிஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட மூன்று படங்களில் ஒன்றாக இப்படம் திகழ்கிறது.
இந்திப் படங்களான அந்தாதூண், கல்லிபாய் ஆகியவை இந்தப் பட்டியலில் மற்ற இரு படங்களாக உள்ளன. இதன் வெற்றியாளர் டிசம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.