சென்னை: பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் திரைத் துறையில் முன்னேறியுள்ளது குறித்து நடிகை மீராமிதுன் அவதூறாக ஒரு காணொலியில் பேசியிருந்தார், அந்தக் காணொலியை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலரும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டத்தில் கலகத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின்கீழ் மத்திய குற்றப் பிரிவு வழக்குப்பதிந்து மீராமிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கில் இருவருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியுள்ளது.
இதற்கிடையில் இருவர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல்செய்திருந்தது. அதன் நகல்களைக் கொடுப்பதற்காக நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் இன்று நேரில் ஆஜராக வேண்டுமென அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
மிஸ்ஸான மீராமிதுன்
இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி. சந்திரசேகர் முன் விசாரணைக்கு வந்தபோது, சாம் அபிஷேக் மட்டும் ஆஜரான நிலையில், நடிகை மீரா மீதுன் ஆஜராகவில்லை.
அப்போது காவல் துறை தரப்பில் முன்னிலையான அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர், பிணை வழங்கியபோது ஒவ்வொரு திங்கள்கிழமையும் காலை 10.30 மணிக்கு விசாரணை அலுவலர் முன் ஆஜராக வேண்டும் என்ற நீதிமன்ற நிபந்தனையையும் மீராமிதுன் நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்தார்.
அப்போது நீதிபதி சந்திரசேகர், நிபந்தனையை நிறைவேற்றவில்லை என்றால் பிணையை ரத்துசெய்யக் கோரி மனு தாக்கல்செய்யலாம் எனக் காவல் துறைக்கு அறிவுறுத்தினார். பின்னர் வழக்கு விசாரணையை ஜனவரி 11ஆம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதி, அன்று ஆஜராகும்படி மீராமிதுனுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:40 கதை சர்ச்சை: தள்ளிப்போனது அஸ்வின் படம்