மும்பை 26/11 தாக்குதலில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 'ஸ்டேட் ஆஃப் சீஜ்: 26/11' என்னும் படம் பாலிவுட்டில் எடுக்கப்பட்டது. இந்தப் படம் முன்னணி ஓடிடி தளமான ஜீ5-இல் வெளியானது. இந்தப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றொரு படைப்பான 'ஸ்டேட் ஆஃப் சீஜ்: டெம்பிள் அட்டாக்' என்னும் படத்தை தயாரித்துள்ளார். கென் கோஷ் இயக்கும் இந்தப் படத்தில் அக்ஷய் கண்ணா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் விவேக் தாஹியா, கவுதம் ரோட், சமீர் சோனி, பர்வீன் தபஸ், மஞ்சரி ஃபட்னிஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து இயக்குநர் கென் கோஷ் கூறுகையில், உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 26/11 மும்பை தாக்குதலின்போது இரண்டாம் கட்ட என்.எஸ்.ஜி தலைவராக இருந்து ஓய்வு பெற்ற சுந்தீப் சென் ஆலோசனையில், இப்படம் உருவாகியுள்ளது.
இது வெறும் படம் அல்ல. நம்மைக் காப்பதற்கு என்றும் தங்கள் உயிர்களை பணயம் வைக்கும் இந்தியாவின் என்.எஸ்.ஜி கமாண்டோக்களுக்கு ஒரு அஞ்சலி. ஒரு கடற்படை அலுவலரின் மகனாக, நமது ஆயுதம் ஏந்திய வீரர்களின் திறனைப் பார்த்து ஆச்சரியத்துடன் வளர்ந்தேன்.
விறுவிறுப்பான சண்டைக்காட்சிகள், அதிரடி திருப்பங்கள் என ரசிகர்களை 'ஸ்டேட் ஆஃப் சீஜ்: டெம்பிள் அட்டாக்' இருக்கையின் நுனியில் இருக்கவைக்கும். இப்படத்தை ஜூலை 9ஆம் தேதி நேரடியாக ஜீ 5 தளத்தில் வெளியிடுகிறோம் என்றார். 'ஸ்டேட் ஆஃப் சீஜ்: டெம்பிள் அட்டாக்' ஜீ5 தளத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
இதையும் படிங்க: ஓடிடியில் வரிசை கட்டும் படங்கள் - அதிர்ச்சியில் திரையரங்க உரிமையாளர்கள்!