ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவில் ஜாம்பவான் நடிகராகத் திகழ்ந்த அக்கினேனி நாகேஷ்வர ராவ் பெயரில் வழங்கப்படும் தேசிய விருதுக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் பழம்பெரும் நடிகை ரேகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் - சிவாஜி கணேசன் போல் தெலுங்கு திரையுலகில் இருதுருவங்களாக திகழ்ந்தவர்கள் என்டிஆர் - ஏஎன்ஆர் என்கிற அக்கினேனி நாகேஷ்வர் ராவ்.
தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், தமிழ்த் திரையுலகின் சிறந்த காதல் காவியமாகத் திகழ்ந்த தேவதாஸ் படத்தின் கதாநாயகனாக நடித்தார். மேலும், சிவாஜி கணேசன் 9 வேடங்களில் தோன்றிய நவராத்திரி தெலுங்கு ரீமேக்கில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இயக்குநராகவும் சில படங்களை இயக்கியுள்ள இவர், அன்னப்பூர்னா ஸ்டூடியோஸ் என்று திரைப்பட படப்பிடிப்பு தளத்தை தொடங்கி தெலுங்கு சினிமாவின் வளர்ச்சிக்கு பெரும்பங்களிப்பை தந்துள்ளார்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்துடன் வலம் வந்த இவரது பெயரில் ஏஎன்ஆர் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் சினிமாத்துறையில் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி வரும் கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
அக்கினேனி சர்வதேச அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் இந்த விருது குறித்து நடிகர் நகேஷ்வர ராவ் மகனும், நடிகருமான நாகார்ஜுனா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, சினிமாவில் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்திய மறைந்த நடிகை ஸ்ரீதேவி, சினிமாத்துறையில் சிறப்பாக செயல்பட்ட ரேகா ஆகியோருக்கு முறையே 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுக்கான ஏஎன்ஆர் தேசிய விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளது.
நவம்பர் 17ஆம் தேதி இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று கூறினார்.