தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. ‘நேருக்கு நேர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் பல முன்னணி இயக்குநர்கள் உடனும் திரை பிரபலங்கள் உடனும் பணியாற்றி தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
சூர்யா இன்று (ஜூலை 23) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளமான ட்விட்டரில் ரசிகர்கள் #HappyBirthdаySuriya, #HBDSuriya என்ற ஹேஷ்டேக்குகளை ட்ரெண்டாக்கி வருகின்றனர். சூர்யாவின் பிறந்தநாளுக்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சூர்யாவின் பிறந்தநாள் ட்ரீட் ஆக ரசிகர்களுக்கு 'சூரரைப் போற்று' படக்குழுவினர் 'காட்டுப் பயலே' என்ற பாடலின் ஒரு நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஜிப்ரான் இசையமைப்பில் உருவான இப்பாடல், வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
சுதா கொங்காரா இயக்கியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தையடுத்து சூர்யா ஹரி இயக்கும் 'அருவா' படத்திலும் வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.