சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான திரைப்படம் 'சூரரைப் போற்று'. திரைப்படம் வெளியானதிலிருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்த இந்தப் படத்தில் பரேஷ் ராவல், மோகன் பாபு, கருணாஸ், ஊர்வசி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஓடிடி தளத்தில் தமிழில் வெளியான பெரிய பட்ஜெட் திரைப்படம் இதுவாகும்.
முதல்முறையாக திரையரங்கில் வெளியீடு
'சூரரைப் போற்று' திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே ரூ. 100 கோடிக்கும் மேல் ப்ரீ பிசினஸ் செய்து ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்தது. அதுமட்டுமல்லாது இந்தாண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவின் பொதுப் பிரிவில் தேர்வானது மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளையும் வென்று குவித்தது.
இந்நிலையில் மதுரை சம்மட்டிபுரத்திலுள்ள மிட்லாண்ட் திரையரங்கில் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் இன்று (பிப்.4) வெளியானது. இதனையடுத்து காலை வெளியான முதல் காட்சியை, சூர்யா ரசிகர்கள் தாரை, தப்பட்டை, மேள, வாத்தியங்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். முதல் காட்சி ரசிகர்களால் நிறைந்தபோதும், பிற்பகல் காட்சியில் அரங்கு நிறையாமல் பொதுமக்கள் கூட்டம் ஓரளவே காணப்பட்டது.
விடுமுறையில் வசூல் எதிர்பார்ப்பு
இது குறித்து திரையரங்க விளம்பர நிர்வாகி கணேசன் பேசுகையில், "ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'சூரரைப் போற்று' திரைப்படத்தை, எங்களின் திரையரங்கு தற்போது வெளியீடு செய்துள்ளது. மதுரையில் வேறு எந்த திரையரங்கிலும் இந்தத் திரைப்படம் வெளியாகவில்லை. முதல் காட்சி மிக அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
அடுத்து வருகின்ற விடுமுறை நாள்களில் பொதுமக்களின் ஆதரவு இருக்கும். தற்போதுதான் விளம்பரம் செய்ய ஆரம்பித்துள்ளோம். ஆகையால், இனி வருகின்ற காட்சிகளில் அரங்கு நிறைந்திருக்கும். வீட்டில் பார்ப்பதைவிட, சிறந்த ஒலி, ஒளி தரத்துடன் பெரிய திரையில் பார்ப்பதையே நமது பொதுமக்கள் பெரிதும் விரும்புவார்கள்' என்றார்.
ஓடிடியில் வெளியிட்டதன் காரணமாக சூர்யா திரைப்படங்களை திரையரங்கங்களில் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்திய அல்லு அர்ஜூன்!