வாலி படத்தில் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே. சூர்யா கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார். இறைவி படத்தில் குணச்சித்திர நடிப்பையும் ஸ்பைடர், மெர்சல் ஆகிய படங்களில் வில்லனாகவும் நடித்திருந்த எஸ்.ஜே. சூர்யா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இதற்கிடையே நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த மான்ஸ்டர் படத்தில், எஸ்.ஜே. சூர்யா முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவைமிக்க நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியா நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இந்தப் படம் அனைத்துவிதமான ரசிகர்களாலும் அங்கீகரிக்கப்பட்டது.
இந்நிலையில், மான்ஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே. சூர்யா, பிரபல இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏஞ்சல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு 'பொம்மை' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் சிகரம் பாலசந்தர் இயக்கத்திலும் பொம்மை என்ற பெயரில் த்ரில்லர் படம் உருவாக்கப்பட்டது.
இப்படத்தின் மூலம் யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக ராதா மோகனுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். எஸ்.ஜே. சூர்யாவின் புதிய படத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன் பூஜை போடப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. காதலை மையமாக வைத்து ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகும் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14 அன்று காதலர் தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இயக்குநர் ராதா மோகனின், 'மொழி', 'அபியும் நானும்' போன்ற படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. சமீபத்தில் அவர் ஜோதிகா, விதார்த் ஆகியோர் நடிப்பில் வெளியான காற்றின் மொழி படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.