15 ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது 'சந்திரமுகி' திரைப்படம். காமெடி கலந்த பேய் படங்களின் அணிவகுப்புக்கு விதை போட்டதே இந்தப் படம்தான் என்று சொல்லும் அளவுக்கு காமெடி, ஹாரர் காட்சிகள் படத்தில் சரிவிகிதத்தில் இருந்தன.
சரி விஷயத்துக்கு வருவோம்... இந்தப் படத்தில் ஜோதிகா நடித்திருந்த கங்கா, சந்திரமுகி பாத்திரத்தில் முதலில் நடிகை சிம்ரன்தான் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் என்ற செய்தி நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய சில நாள்களிலேயே சிம்ரன் கர்ப்பம் தரித்ததால், படத்தில் நடிக்கும் வாய்ப்பு கைநழுவி போனது. இதற்குப் பின்னரே ஜோதிகா நடித்து படம் மிக பிரமாண்ட ஹிட் அடித்தது.
ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பும் சிம்ரனுக்கு கிடைக்காமல்போனது. சமீபத்தில் 'சந்திரமுகி-2' திரைப்படம் குறித்தான தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 'சந்திரமுகி' திரைப்படத்தை இயக்கிய பி. வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார்.
ஆனால், கங்கா பாத்திரத்தில் நடித்த ஜோதிகாவை படக்குழு அணுகவில்லை என ஜோதிகா தெரிவித்த நிலையில், இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிம்ரன் 'சந்திரமுகி' பாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று ஜோதிகா கருத்து தெரிவித்துள்ளார். ஒருவேளை சிம்ரன் இரண்டாம் பாகத்தில் நடித்தால், இது அவருக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த மறுவாய்ப்பு என்றே கூறலாம்.
இதையும் படிங்க... கவலைகள் போக்கி நடனமாடுங்கள் - சிம்ரன் வெளியிட்ட க்யூட் டான்ஸ் வீடியோ