2013இல் வெளியான 'கடல்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அடியே' பாடல் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகில் அறிமுகமான சித் ஸ்ரீராம், முதன்முறையாக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார்.
பிரமாண்டமான இந்த இசை நிகழ்ச்சியை வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதி சென்னையிலிருந்து தொடங்கவுள்ளார்.
இந்தியா, சிங்கப்பூரில் ஏ.ஆர். ரஹ்மானின் 'நெஞ்சே எழு', இளையராஜாவின் 'இளையராஜா 75', அனிருத்தின் 'சிங்கப்பூர் லைவ்' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்திய Noise and Grains டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் இந்த இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

தற்போது சித் ஸ்ரீராமின் 'ஆல் லவ் நோ ஹேட்' என்ற தலைப்பில் தென்னிந்திய இசை சுற்றுப்பயணத்தை நடத்தவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 23ஆம் தேதி கொச்சியிலும், மார்ச் 7ஆம் தேதி மதுரையிலும், மார்ச் 13ஆம் தேதி பெங்களூருவிலும் இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
இந்தத் தென்னிந்திய இசைப் பயணத்தின் முதல் நிகழ்ச்சி வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று தி.நகரில் நடைபெற்றது. இதில் பேசிய சித் ஸ்ரீராம், "இசை ஆற்றல்மிக்க சாதனம். சென்னையில் நடக்கவுள்ள இந்த இசைக்கச்சேரி என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்.
நான் சென்னையில் பிறந்தவன். சென்னை மக்களை மீண்டும் சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி இருக்கும். இசை நிகழ்வு மூன்று மணி நேரம் நடக்கவிருக்கிறது.

நிகழ்ச்சியில் 30 முதல் 35 பாடல்கள் பாடப்படும் என நினைக்கிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் பாடல்கள் பாடப்படவுள்ளன. நான் பாடிய பாடல்கள் மட்டுமல்லாமல் எனக்குப் பிடித்தமான அனைத்து பாடல்களையும் பாட நினைக்கிறேன். வழக்கமான எனது இசைக்குழுவையே இந்த நிகழ்ச்சிக்கும் நான் பயன்படுத்த நினைக்கிறேன்.
இசை நிகழ்வில் நாட்டுப்புறக் கலைஞர்களையும் பாடவைக்க முடிவெடுத்துள்ளோம். எனது குரல் வளத்திற்கு நான் பொறுப்பல்ல. அது பிறப்பிலிருந்து வருவது. பாடகராக நினைப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் உழைக்க வேண்டும். ஏ.ஆர். ரஹ்மான் எனக்கு நிறைய ஆலோசனைகளைக் கொடுத்துள்ளார்.
குத்துப் பாடல்களை பாடுவது எனக்குப் பிடிக்கும். என் வாழ்வை நான் இசைக்கு அர்ப்பணித்துவிட்டேன். படத்தில் நடிக்கும் முடிவு எதுவும் இப்போது இல்லை. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வேண்டுமானால் அது பற்றி யோசிப்பேன்.

தமிழ் வார்த்தைகள் குறித்து ஏதாவது சந்தேகமிருந்தால் என் அம்மாவிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வேன். தெலுங்கு எனக்கு இரண்டாவது மொழியைப் போல, தெலுங்கில் பேசுவதும் பாடுவதும் எனக்குப் பிடித்துள்ளது. தெலுங்கில் தெளிவாகப் பேச முயற்சித்துவருகிறேன். அனைத்து வயதினரும் கேட்டு ரசிக்கும்விதமாக இந்த இசை நிகழ்வு இருக்கும்" எனத் தெரிவித்தார்.