சென்னை: சின்னத்திரை நடிகரான ஈஸ்வர் திருவான்மியூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அவரது மனைவியும், சின்னத்திரை நடிகையுமான ஜெயஸ்ரீ கடந்த 2019ஆம் ஆண்டு கணவர் ஈஸ்வர் கொடுமைப்படுத்துவதாக அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், காவல்துறையினர் ஈஸ்வரை கைது செய்தனர். கைதுக்கு பின் ஈஸ்வர் பிணையில் வெளிவந்தார். இதையடுத்து ஈஸ்வரும், ஜெயஸ்ரீயும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், ஈஸ்வர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , "ஜெயஸ்ரீ தங்களது அடுக்குமாடி குடியிருப்பில் மருத்துவர் ராகவேஷ் என்பவருடன் ஒன்றாக வசித்து வருகிறார்.
அவர்கள் ஒன்றாக இருந்து வருவது ராகவேஷின் தந்தையான சண்முகத்திற்கு பிடிக்கவில்லை. தொழிலதிபரும், சினிமா தயாரிப்பாளரான சண்முகம் தனது மகனை விட்டு ஜெயஸ்ரீ பிரிந்து செல்ல வேண்டும் என தன்னிடம் கூறியுள்ளார்.
அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படம், வீடியோவை தன்னிடம் காண்பித்து வேதனை தெரிவித்தார். தனது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இது குறித்து ஜெயஸ்ரீயிடம் நான் பேச மறுத்துவிட்டேன்.
ராகேஷை விட்டு ஜெயஸ்ரீ செல்லவில்லையென்றால் அவர் மீது காரை ஏற்றி கொலை செய்துவிடுவேன் என சண்முகம் மிரட்டினார். இதனால் ஜெயஸ்ரீக்கு ஏதாவது நடந்தால் தன் மீது பழி வரும் என்பதால் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்.
ஜெயஸ்ரீக்கு ஏதேனும் நடந்தால் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. ஜெயஸ்ரீ பணம் பறிக்கும் நோக்கத்திலேயே பல பேரிடம் பழகி வருகிறார்.
ஜெயஸ்ரீ பொய் காரணங்களை கூறி விவாகரத்து வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வருகிறார்" என்று சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பிரபல சின்னத்திரை நடிகை விஷம் அருந்தி தற்கொலை முயற்சி