செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா ஆகியோருடன் சிலர் நடித்த காதல், காதல், ப்யூர் காதலை வித்தியாச பாணியில் சொல்ல முயற்சித்த படம் 'இரண்டாம் உலகம்'
தமிழில் ஆக்ஷன், காமெடி, பேண்டஸி, சஸ்பென்ஸ், திரில்லர் உள்ளிட்ட பல்வேறு வகையறாக்களிலும் படங்கள் வந்துகொண்டிருக்க, மாற்று சினிமா என்று விளம்பரப்படுத்தப்பட்டது இந்தப் படம். அதை பட ரிலீசுக்கு முன்பு வெளியிடப்பட்ட இரண்டு டிரெய்லர்களும் உறுதிப்படுத்தின. முதல் டிரெய்லரில் அற்புதமான பின்னணி இசையுடன் விஷுவல் ட்ரீட் அளித்திருந்தனர்.
இதன்பின்னர் வெளியிட்ட மற்றொரு டிரெய்லரில் மெலடியான பின்னணி இசையுடன் கொஞ்சம் குறும்பான காட்சிகள், வசனங்கள் இடம்பிடித்திருந்தது. இவை இரண்டையும் வைத்து பார்க்கையில் படம் மீது சற்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது உண்மைதான். இது ஒருபுறம் என்றால் செல்வராகவனின் படங்களில் ட்ரேட்மார்க்காக விளங்கும் பாடல்கள் இதிலும் ஏ-ஒன் ரகம். இவை அனைத்தும் சேர்ந்து புதிய அனுபவத்தை காண காத்திருக்க வைத்தது.
நவம்பர் 22இல் ரிலீசான இப்படம், முதல் நாளிலேயே ரசிகர்களுக்கு தந்த மிகப் பெரிய எதிர்பார்ப்பை அப்போது பூர்த்தி செய்யாமல்போனது. ஒரு சிலர் ஓஹோ என்றாலும், அநேகம் பேரை இந்த வித்தியாசமான முயற்சி கவரவில்லை.
கதைப்படி நிஜ உலகம், மற்றொரு கற்பனை உலகம். இரண்டிலும் படத்தின் பிரதான கதபாத்திரங்களான ஆர்யா - அனுஷ்கா இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இரண்டு உலகங்களிலும் முரண்பாடான கதாபாத்திரங்கள். இது தவிர கற்பனை உலகத்துக்கு என வண்ணமயமான நிறம், இயற்கை பின்னணி, விநோத விலங்குகள் என பேண்டஸி விஷயங்கள் நிறைந்திருக்கும்.
காதல் என்பதே இல்லாத பேண்டஸி உலகில், காதல் பூ பூக்க வைக்கும் ஒன்லைன்தான் கதை. இதன் முதல் பாதியில் இரு உலகங்களிலும் நடக்கும் நிகழ்வுகளை மாறி மாறி காட்டியிருப்பார்கள். இரண்டாவது பாதி முழுவதும் இரண்டாம் உலகமே ஐக்கியமாயிருக்கும்.
நிஜ உலகில் ஆர்யா - அனுஷ்கா இடையே காட்டப்பட்டிருக்கும் மேஜிக், சுவாரஸ்யம் எதுவும் இரண்டாம் உலகில் இருக்கும் அதே ஜோடிகளிடையே இல்லாமல் முற்றிலும் லாஜிக் ஓட்டையாக இருக்கிறது என்று படம் மீதான விமர்சனம் எழுந்தது.
இது ஒருபுறம் என்றாலும் படத்திலுள்ள தொழில்நுட்ப சமாச்சாரங்களுக்கு பாராட்டுகள் குவிந்தன. ராம்ஜியின் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜ் இசை, அனிருத் பின்னணி இசை, வைரமுத்துவின் பாடல் வரிகள் மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட விதம் என அனைத்தும் வெகுவாக கவரும் வகையிலே இருந்தன. உருகி உருகி காதலிக்கும் ஆர்யா - அனுஷ்கா, காதல் என்றால் என்னவென்றே தெரியாமல் காதலில் விழும் ஆர்யா - அனுஷ்கா என இருமாறுபட்ட காதலின் பரிணாமத்தில் கதை சொல்லிய விதம் சலிப்பைத் தவிர ரசிகர்கள் மனதில் வேறு எதையும் பூக்கச் செய்யவில்லை.
இருவேறு உலகங்கள், அங்குள்ள காதலை மாறுபடுத்திக் காட்ட, வசனம் குறைவு, உணர்ச்சி அதிகம் என்ற தனது வழக்கமான பாணியை கடைபிடித்திருப்பார் செல்வா. அதேபோல் கற்பனையான இரண்டாம் உலகில் வெள்ளைக்காரர்கள் தூய தமிழில் பேசுவது, வண்ணமயமான வானம், அங்குள்ள வித்தியாச விளங்குகள் என அநேகம் பேர் கனவில் பார்த்திருப்பதை காட்சிப்படுத்தியிருப்பார்.
செல்வராகவன் படங்களை பார்ப்பதை விட, புரிந்துகொள்வது என்பது ரசிகர்களுக்கு மிகவும் சவாலான விஷயம். வாழ்ந்தால் இந்த பெண்ணுடன் வாழ வேண்டும் என மனதுக்கு பிடித்த பெண்ணுக்கு தாலி எடுத்து அவளது மாப்பிள்ளையிடம் கொடுக்கும் தருணத்தில், தானே தாலி கட்டி மனைவியாக்கி கொள்ளும் ரவுடியின் எதார்த்த செயலை ராவாக 'புதுப்பேட்டை' படத்தில் காட்சிப்படுத்தியது மட்டுமல்லாமல், நியாயப்படுத்தவும் செய்திருப்பார்.
அதேபாணியில் பேண்டஸி, காதல் இல்லாத மற்றொரு உலகம், உருகி உருகி காதலிக்கும் காதலர்கள் என்ற விஷயத்தை சினிமாவுக்கு உண்டான கமர்ஷியல் சமரசங்கள் இல்லாமல் அப்படியே ராவாக காட்சிப்படுத்தியிருக்கும் இரண்டாம் உலகம் மேஜிக் நிகழ்த்தாமல் போனதற்கு முக்கிய காரணம். தொடக்கத்தில் சுவாரஸ்யத்தை காட்டி ஒரு கட்டத்தில் படத்தின் மீதான ஈர்ப்பு குறைந்து எப்படா முடிப்பீங்க என்ற எண்ணத்தை ஏற்படுத்தியபோதிலும், தமிழ் சினிமாவில் யாரும் செய்திறாத முயற்சியாகவும், புதிய பரிணாமத்தை கோலிவுட் படைப்பாளிகளுக்கு காட்டியது.
அமுல்பேபி ஆர்யா - க்யூட் அனுஷ்கா, வீரமகன் ஆர்யா - வீரமங்கையாக அனுஷ்கா என படம் முழுவதும் இவர்கள் நான்கு பேரை படத்துக்கு தேவையான நடிப்பை பார்வை முதல் உடல்மொழி வரை தந்திருப்பார்கள். இவர்களுடன் சில கதாபாத்திரங்களும் கூடவே பயணித்திருப்பார்கள். பாகுபலி படத்துக்கு முன் அனுஷ்காவை இவ்வளவ அழகாக காட்டியது இந்தப் படம்தான் என்று மறுக்காமல் சொல்லலாம்.
பொதுவாகவே சில படங்கள் ரசிகர்களின் புரிதல், ரசனை ஆகியவற்றை கடந்து தனது காலத்தை முந்திக்கொண்டு ரிலீசாகி கவனிக்கப்படாமல், பின்னர் அதற்கான காலம் வந்த பிறகு போற்றப்படுவதுண்டு. கமலின் பல படங்கள் அந்தப் பட்டியலில் உள்ளன. இந்த லிஸ்டில், திரையரங்கில் பார்க்கும்போது விசில் அடித்து ரசிக்க வைக்கவும், அதே சமயம் ஒன்னுமே புரியலயே என குழம்ப வைக்கும் செல்வராகவனின் சில படங்களும் இருக்கின்றன.
இந்த ஆண்டில் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வெளிவந்த என்ஜிகே படமும் இந்த வகையறாதான். ஒரு படத்துக்குள் பல லேயர்களை புகுத்தியிருப்பார். இதை புரிந்துகொண்டு பார்த்தவர்கள் ஒஹோ என்றாலும், புரியாமல் தலையை பிய்த்துக்கொண்டவர்களுக்காக டீகோடிங் செய்து, புதிராகவும் படம் எடுத்து பின்னர் புரிய வைக்கலாம் என்ற புதிய பாணியை அறிமுகப்படுத்தினார் செல்வா.
சில படங்கள் பார்த்த உடனே பிடிக்கும், ஆனால் சில படங்களை திரும்ப திரும்ப பார்க்கும்போது காணப்படும் டீடெயிலிங் ஆண்டுகள் கடந்து புருவத்தை உயர்த்தி வியக்க வைக்கும். இதில் இரண்டாம் வகையை ஒத்து இருக்கும் திரைப்படமாக அமைந்திருந்த இரண்டாம் உலகம் என்ற மாற்று முயற்சி பின்னாளில் அங்கீகரிக்கப்படுமா என்பதை காலம் சொல்லும்.
கோலிவுட் சினிமாக்களை தியாகராஜர் பாகவதர் காலம் தொட்டு, விடாமல் எந்த காலத்திலும் பிடித்து வைத்திருக்கும் காதல் என்ற காண்சப்டை வைத்து சற்றே மாற்று பாணியில் சொல்ல முயற்சித்த இந்த இரண்டாம் உலகமும் நிச்சயம் ஒரு மாற்று சினிமாதான்.