தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இரண்டாம் அலையின்போது அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் பல முக்கிய திரைப்பிரபலங்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட வடிவேலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவரை தொடர்ந்து நடிகர் அருண் விஜய், மீனா உள்ளிட்டோர் குடும்பத்தினருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது.
சில நாள்களுக்கு முன்னர் நடிகர் சத்யராஜ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது மகன் சிபி சத்யராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனது தந்தை குணமாகி வீடு திரும்பி விட்டார். இன்னும் ஒரு சில நாள்களில் அவர் தனது வழக்கமான பணிகளை கவனிப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிங்க' - விஜய் ஆண்டனி