பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து உருவாகிவரும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி கோலிவுட்டின் பேசுபொருளாக மாறியிருக்கிறது. சார்பட்டா என்றால் என்ன என பலரும் ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள். இது குறித்த தொகுப்பு இது...
சார்பட்டா பரம்பரை போஸ்டரில் ‘ரோசமான ஆங்கில குத்து சண்டை’ என்றொரு கேப்சன் இருக்கிறது. இங்கிருந்து ஆரம்பிக்கிறது இதன் வரலாறு, ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் விட்டுப்போன சொத்துகளில் ஒன்று பாக்ஸிங் எனப்படும் குத்துச்சண்டை.
1930களில் வடசென்னை மக்களின் வாழ்வியலோடு கலந்திருந்தது குத்துச்சண்டை. தற்போதும் குத்துச்சண்டை மீது வடசென்னை மக்களுக்கு காதல் அதிகம். சார்பட்டாவுக்கு காரணப் பெயர் தெரியவில்லை. சென்னை இரு குத்துச்சண்டை குழுக்கள் அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்தன. ஒன்று இடியாப்ப நாயக்கர் பரம்பரை, மற்றொன்று சார்பட்டா பரம்பரை. இந்த சார்பட்டா பரம்பரை நாயகன்தான் ஆறுமுகம். இந்தத் திரைப்படம் அவரது கதையாகதான் இருக்க வேண்டும் என கோலிவுட் வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.
120 குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்ற ஆறுமுகம், 100 போட்டிகளுக்கு மேல் எதிராளியை நாக்-அவுட் செய்த மாபெரும் குத்துச்சண்டை வீரர் ஆவார். சர்வதேச அளவில் புகழ்பெறாத எத்தனையோ முகமது அலி நம் தமிழ்நாட்டில் இருந்ததற்கு, இருப்பதற்கு ஆறுமுகம் ஒரு சான்று.
இத்தனை போட்டிகளில் வெற்றிபெற்ற அந்த ஆறுமுகம் யார் என்ற கேள்வி உங்களுக்கு எழாமல் இருக்காது. தியாகராஜன் குமாரராஜாவின் ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தை பார்த்தவர்கள் ‘நாக்-அவுட்’ ஆறுமுகத்தை நிச்சயமாக பார்த்திருப்பீர்கள். அப்படத்தில் கஜேந்திரன் எனும் கொடூர வில்லனாக நடித்தவர்தான் நம் ஆறுமுகம்.
உலகமயமாதலுக்கு பிறகு குத்துச்சண்டை கார்ப்பரேட்களின் கைவசம் சென்றது. அதன் காரணமாக பணம் படைத்தவர்களே பெரும்பாலும் நாடறியும் வீரர்களாக பிரகடனப்படுத்தப்பட்டார்கள். ஆனால், ஆறுமுகம் போன்ற பல வீரர்கள் இன்னும் நம் கண் முன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இருட்டடிப்பு செய்யப்பட்ட தலைசிறந்த தமிழர்கள் குறித்து நம் வருங்கால தலைமுறையினர் அறிந்துகொள்வது அவசியமாகிறது.
பாப்கார்ன், சிப்ஸ் சாப்பிட்டபடி ஆங்கில சேனலில் ரெஸ்லிங் பார்த்து கைதட்டிக் கொண்டாடும் நம் மக்கள், நம்மவர்களை பற்றியும் அறிந்துகொள்ளட்டும்.
சார்பட்ட பரம்பரை வெற்றிபெற வாழ்த்துகள் பா. ரஞ்சித்..
இதையும் படிங்க: ஒரே மாதத்தில் 50 கச்சேரிகள் - திராவிடத்தைப் பரப்பிய காந்தக் குரலோன் ஹனிபா!