ஏ.ஆர் முருகதாஸ் - விஜய் கூட்டணியில் முதன்முறையாக வெளியான திரைப்படம் 'துப்பாக்கி'. 2012ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் விஜய் ராணுவ அதிகாரியாக மிரட்டியிருப்பார். விஜய் துப்பாக்கி படத்தில் மிகவும் ஸ்டைலிஷாக தோன்றி அசத்தியிருப்பார். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது
பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய ஹிட் அடித்ததோடு முதன்முறையாக 100 கோடி வசூல் செய்த விஜய் திரைப்படம் என்ற பெருமையையும் துப்பாக்கி அடைந்தது. இன்றளவும் விஜய்யின் ரசிகர்கள் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று அவ்வபோது முருதாஸுக்கு கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஆனால் அவர் விஜய்யுடன் அதன்பின் 'கத்தி', 'சர்கார்' என இரண்டு படங்களை அளித்தாலும் துப்பாக்கி இரண்டாம் பாகம் குறித்து பேசாமல் இருந்துவருகிறார்.
இதனிடையே விஜய், நயன்தார நடிப்பில் 'பிகில்' திரைப்படம் நேற்று வெளியானது. கால்பந்து பயிற்சியாளராகவும் தாதாவாகவும் இரு வேடங்களில் விஜய் நடித்திருந்த பிகில் படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்தச் சூழலில் துப்பாக்கி திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சந்தோஷ் சிவன் ட்விட்டரில் ஒரு பதிவிட்டார். அந்தப் பதிவில் அவர் பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசியதை ட்வீட் செய்து, துப்பாக்கி இரண்டாம் பாகத்திற்கு காத்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் 'துப்பாக்கி' இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கை விஜய் ரசிகர்கள் மத்தியில் தோன்றியிருக்கிறது. துப்பாக்கி இயக்குநர் முருதாஸும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடனான தர்பார் படத்தை முடித்துவிட்டார். இந்தப் படத்திலும் சந்தோஷ் சிவனே ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். எனவே அவரிடம் முருதாஸ் 'துப்பாக்கி - 2' குறித்து பேசியிருக்கலாம் என்றும் ட்வீட் உண்மையாக வாய்ப்புள்ளது என்றும் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.