அட்டகத்தி
2013, ‘ஆடி போனா ஆவணி’, ‘நடுக்கடலுல கப்பல இறங்கி’ பாடல்களை இளைஞர்கள் முனு முனுக்கத் தொடங்கியிருந்தனர். சந்தோஷ் நாராயணன் எனும் புதிய இசையமைப்பாளர் இசையமைத்திருப்பதாக பேச்சு. ஒரு படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் பாடல்களுக்கு பங்களிப்பு இருந்தாலும், பின்னணி இசை அதையும் தாண்டி உணர்வு குன்றாமல் கதையை நகர்த்திச் செல்வதில் முக்கிய இடம் வகிக்கிறது. சந்தோஷ் நாராயணன் படங்களில் பின்னணி இசை படத்துக்கு உறுதுணையாக இருக்கிறது. 2013ஆம் ஆண்டு அறிமுகமான சந்தோஷ் நாராயணனின் இந்த 7 வருட இசைப்பயண வளர்ச்சி அபரிமிதமானது. இதில் இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிக்கு இரண்டு படங்கள் இசையமைத்துவிட்டார்.
சந்தோஷ் நாராயணனின் இந்த வளர்ச்சிக்கு அவரது கடின உழைப்பும் மெனக்கெடலுமே காரணம். அதற்கு அவர் முதல் படத்தில் இருந்தே ஒரு உதாரணத்தை சொல்லலாம், ‘வா ரூட்டு தல’ பாடலில், இரு கல்லூரி மாணவர்களுக்கு கதாநாயகன் திருமணம் செய்து வைப்பார். அந்தக் காதல் ஜோடியின் பெற்றோர்கள் கதாநாயகனை மண்ணள்ளித் தூற்றுவார்கள்.அந்தப் பாடலின் இடையே இடம்பெறும் இக்காட்சிக்கு நிஜமாக மண் அள்ளி வீசுவது போன்ற சத்தத்தை பயன்படுத்தியிருப்பார்.
பீட்சா
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஹாரர் த்ரில்லர் ‘பீட்சா’. ஹாரர் படத்தில் பின்னணி இசை மிக முக்கியமான பங்கு வகிக்கும். பார்வையாளருக்கு ஒரு காட்சி அச்ச உணர்வை ஏற்படுத்தும் முன் பின்னணி இசை அதற்கு நம்மை ஆயத்தப்படுத்தும். ‘பீட்சா’ படத்தில் ஒரு குழந்தை நோட்புக்கில் கிறுக்குவது போன்ற காட்சி, அதற்கு முன்பான சந்தோஷின் பின்னணி இசை ஏதோ நடக்கப்போகிறது என்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அடுத்த நொடியே முழு அமைதி நிலவி, குழந்தை நோட்டில் கிறுக்கும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கும். விஜய் சேதுபதி குழந்தையிடம் பேசிவிட்டு பின்பக்கம் திரும்பும்வரை அந்த சத்தம் மட்டும் கேட்கும், மீண்டும் விஜய் சேதுபதி குழந்தையின் பக்கம் திரும்பும்போது ரத்தக்கறை படிந்த முகத்துடன் பாபி சிம்ஹா இருப்பார். இருவரும் சத்தமிட, பின்னணி இசை அப்படியே நீளும்...
நிசப்தத்தை சரியாக கையாளத் தெரிந்தவர் சந்தோஷ். இந்த படத்தில் அவரது இசை மிகுந்த வரவேற்பை பெற்றது. இதில் ரஜினி வசனம் கலந்த ‘ராத்திரியை ஆளும் அரசன்’ என்ற பாடலை உருவாக்கிய சந்தோஷ் நாராயணன், பின்னாட்களில் ரஜினிக்கே இசையமைத்தார்.
சூது கவ்வும்
நலன் குமாரசாமி இயக்கத்தில் சமூக அவலங்களைப் பகடி செய்து வெளியான இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கான தீம் மியூசிக் வெகுவாக பாராட்டப்பட்டது. இந்த இசைக்கு ‘sudden delight' என பெயர் வைக்கப்பட்டிருந்தது, அதாவது திடீர் சந்தோஷம்... இந்த இசை குறித்து சந்தோஷிடம் கேட்டதற்கு, அதுவும் திடீரென நேர்ந்ததுதான், பெரிதாக மெனக்கெடவில்லை என கூறியிருப்பார்.
ஜிகர்தண்டா
மியூசிக்கல் கேங்ஸ்டர் திரைப்படம் என்ற குறிப்போடு வெளியானது கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகர்தண்டா’. கொடூர வில்லனான அசால்ட் சேதுவுக்கு வரும் பின்னணி இசை வெறித்தனம் என்றே சொல்லலாம். அதேபோல் இதில் பெற்ற ‘டிங் டாங்’ பாடலும் சேதுவின் கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்திருக்கும்.
மெட்ராஸ்
உண்மையான சென்னை மக்களின் வாழ்வியலைப் பற்றி பேசும் படம், ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘மெட்ராஸ்’. பலருக்கு புதிராகவும், ஏரியா மக்களின் அரசியல் மையப்புள்ளியாகவும் இருக்கும் சுவருக்கு ஒரு தீம் மியூசிக் போட்டிருப்பார் சந்தோஷ். படம் நெடுக அடிக்கடி வரும் சுவர் தீமும், சிக்கல் தீமும் ஒரு புதிரான உணர்வை நமக்குள் கடத்தும்.
கபாலி, காலா
திரையுலகுக்கு அறிமுகமான நான்கே வருடங்களில் இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிக்கு இசையமைக்கும் வாய்ப்பு ரஞ்சித் வாயிலாக சந்தோஷ் நாராயணனுக்கு கிடைத்தது.
ரஜினியின் பெயர் போடும்போது வரும் தீம் மியூசிக் கபாலி படத்தில் மாற்றப்பட்டிருந்தது. கபாலி, காலா ஆகிய இரண்டு படங்களின் தீம் மியூசிக் மற்றும் பின்னணி இசை கதைக்கு பக்கபலமாக அமைந்தது.
வடசென்னை
இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறனுடன் சந்தோஷ் நாராயணன் முதன்முதலாக கூட்டணி அமைத்த படம் வடசென்னை. இந்தப் படமும் இசைக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. படம் வெளியாகும் முன்பே பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். மையக் கதாபாத்திரங்களுக்கான பின்னணி இசை நல்ல வரவேற்பை பெற்றது.
சென்னைவாசிகளின் கானா, ரேப் ரக பாடல்களை அதிகமாக பயன்படுத்தியது சந்தோஷ் நாராயணன்தான். சென்னை வாழ்வியல் சார்ந்து கடந்த 8 வருடங்களில் வெளியான படங்களில் பெரும்பான்மையானவை சந்தோஷ் கைவணத்தில் உருவானவை.
சந்தோஷ் நாராயணனின் மெல்லிசை பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ‘குக்கூ’ படத்தில் இடம்பெற்ற ‘மனசுல சூரக் காத்தே’ பாடலில், ‘மின்சார ரயிலும் வண்ணக் குயில் போல கூவுதே’ என ஒரு வரி இடம்பெற்றிருக்கும். இது அவரின் மெல்லிசை பாடல்களைச் சுட்டிக்காட்டுவதற்காகவே எழுதப்பட்டது போல் இருக்கும். பிறந்தநாள் வாழ்த்துகள் சந்தோஷ் நாராயணன். உங்கள் இசைப்பயணம் தொடரட்டும்...
இதையும் வாசிங்க: இசை வானில் ’ஜென்சி’ ஒரே வெண்ணிலா...