'ஏ1' வெற்றியைத் தொடர்ந்து சந்தானம் இயக்குநர் ஜான்சன் கூட்டணி இணைந்துள்ள 'பாரீஸ் ஜெயராஜ்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியது. கடந்த ஆண்டு ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்த 'ஏ1' திரைப்படம் சைலன்ட் ஹிட் அடித்தது.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும் பரவலாகப் பேசப்பட்டன. காமெடியை விட்டு விலகி ஹீரோவாக அகலக்கால் வைத்த சந்தானத்திற்கு நீண்ட இடைவெளிக்குப்பிறகு மகிழ்ச்சியை தந்த படம் 'ஏ1' என்று சொல்லலாம்.
தற்போது அதே சந்தானம் - ஜான்சன்- சந்தோஷ் நாராயணன் கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்திற்கு 'பாரீஸ் ஜெயராஜ்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சந்தானம் கானா பாடகராக நடித்துள்ளார். இந்தப் படத்தில் சந்தானத்தின் இரண்டாவது லுக் இன்று வெளியானது.
வெள்ளைச்சட்டை பேண்ட்டுடன் நீல நிற கோட் அணிந்து கண்ணாடியுடன் கையில் மைக் பிடித்துள்ளதுபோல் உள்ள லுக் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
கானா பாடகர் காதலில் விழுந்தால் என்னவாகும் என்பதே படத்தின் கதை. இதில் சந்தானத்திற்கு ஜோடியாக அனைகா சோதி, சஸ்டிகா ஆகியோர் நடித்துள்ளனர். பாலாவின் 'நான் கடவுள்', 'அவன் இவன்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவுசெய்த ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார்.
லார்க் ஸ்டுடியோஸ் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் போஸ்டரில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாக இருப்பதாகவும் ஜனவரி 2021ஆம் ஆண்டு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.