மேரி கோம், எம்.எஸ்.தோனி, சச்சின், ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் ஆகியோரைத் தொடர்ந்து மற்றுமொரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாற்று படத்தினை ஹிந்தி திரையுலகம் படமாக்க இருக்கிறது. விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவதையடுத்து, பாலிவுட் தற்போது விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க ஆர்வம் காட்டிவருகிறது. இந்த பட்டியலில் தற்போது பிரபல டென்னிஸ் வீராங்கனை சானிய மிர்சாவும் இணையவுள்ளார்.
சானிய மிர்சா குறித்த வாழ்க்கை வரலாற்று திரைப்படம் உருவாகவுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனை பாலிவுட் இயக்குநர் ரோனி ஸ்குருவாலா இயக்கவுள்ளாகவும், இதில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த படத்தில் சானிய மிர்சாவுடைய சிறு வயது வாழ்க்கை, டென்னிஸில் முன்னேறுவதற்காக செய்த போராட்டங்கள் என முக்கிய பகுதிகளை படமாக்கப்படவுள்ளது. மேலும் இதைப்பற்றி சானிய மிர்சா கூறுகையில், என்னுடைய பயணம் குறித்த படத்தை பெரிய திரையில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும், என்னுடைய வாழ்க்கை வரலாற்றை சரியான இயக்குநர் படமாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.