கன்னட திரையுலகில் போதைப்பொருள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய குற்றப்பிரிவு அலுவலர்கள் (சிசிபி) விசாரணை நடத்திவருகின்றனர்.
இது தொடர்பாக ஏற்கனவே ரவி என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு அலுவலர்கள் (சிசிபி) நடிகை ராகினியின் வீட்டில் நேற்று (செப் 4) காலை சோதனையிட்டனர். நேற்று காலை ஆறு மணியளவில் மத்தியக் குற்றப்பிரிவு அலுவலர்கள் ராகினியின் வீட்டில் சோதனை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து, அவர் போதைப்பொருள் வழக்குத் தொடர்பான விசாரணைக்காக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு (சிசிபி) கொண்டுசெல்லப்பட்டார். இந்நிலையில், கன்னட திரைப்பட உலகில் போதைப்பொருள்களை சப்ளை செய்ததாக ராகினியை மத்திய குற்றப்பிரிவினர் கைதுசெய்துள்ளதாக பெங்களூரு இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெங்களூரு இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராகினி திவேதி கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவருடன் ராகுல், வீரன் கண்ணா என்ற இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கைதுசெய்யப்பட்ட ரவியும் ராகினியும் இணைந்து கன்னட உலகில் பல பார்ட்டிகளை நடத்தியுள்ளனர். அதன்மூலம் கன்னடத் திரையுலகில் இருக்கும் முக்கியப் புள்ளிகளுக்கு இவர்கள் போதைப்பொருள்கள் சப்ளை செய்துள்ளதாகவும் சந்தீப் பாட்டீல் கூறினார்.
திரைப்படத் தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான இந்திரஜித் லங்கேஷ், கன்னடத் திரையுலகில் இருக்கும் போதைப்பொருள் புழக்கம் குறித்த தனது வாக்குமூலத்தை ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவினருக்கு அளித்துள்ளார். கன்னடத் திரையுலகில் குறைந்தது 15 பேர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராகினி திவேதி தமிழில் நடிகர் ஜெயம் ரவியுடன் "நிமிர்ந்து நில்" திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓடிடி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசன்!