நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் சதவிகித அடிப்படையில் சம்பளம் வாங்கும் முறைக்கு மாற வேண்டும் என்று விநியோகஸ்தரும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பிரமிட் நடராஜன் என்னிடம் நாட்டில் கரோனா நிலவும் இந்த நெருக்கடியான நேரத்தில் சதவிகிதத்தில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்து ஒரு படம் எடுத்தால் என்ன என்று யோசனை கூறினார். இதுபோன்ற சதவிகிதத்தில் சம்பளம் வாங்கும் முறையில் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று கூறிய அவர், இது குறித்து ஆர்.பி. சௌத்ரியிடம் பேச சொன்னார்.
இதனையடுத்து, சௌத்ரியிடம் இதுகுறித்து பேசினேன். நடிகர்கள், இயக்குநர்கள் கோடிகளில் சம்பளம் வாங்குகிறவர்கள் சதவிகித அடிப்படையில் சம்பளம் வாங்க வேண்டும். அதன் அடிப்படையில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். இதனைக்கேட்ட அவர் நல்ல ஐடியா என்று படம் தயாரிக்க ஒப்புக்கொண்டார். இதனையடுத்து கே.எஸ். ரவிக்குமார் சதவிகித அடிப்படையில் அந்த படத்தை இயக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தப் படத்தில் அனைத்து நடிகர்களும் நடிக்கும் வகையில் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட உள்ளன. முக்கியமான பாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளார். அவரும் சதவிகித அடிப்படையில சம்பளம் வாங்க ஒப்புக்கொண்டார். படத்தில் கௌரவ வேடங்களில் நடிக்க, விஜய் சேதுபதியும் பார்த்திபனும் ஒப்புக்கொண்டார்கள். இன்னும் சில நடிகர்களிடம் பேசிக்கொண்டுள்ளோம். பணியாற்றும் அனைவருக்கும் வியாபாரத்தின் அடிப்படையில் சம்பளம் உண்டு. இந்த புதுமையான படத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 2 கோடி ரூபாயில் உருவாகும் இந்தப் படத்தின் கணக்கு வழக்குகளை நேர்மையாக செய்ய உள்ளோம்.
எத்தனை பேர் வருகிறார்களோ அத்தனை பேருக்கும் பங்கு கொடுக்கலாம் என்ற அடிப்படையில் இந்தப் படத்தை ஆரம்பிக்க உள்ளோம். அதிகபட்சம் 60 நாள்களில் படத்தை முடித்து தியேட்டருக்கு கொண்டுவர வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். இந்தப் படம் தியேட்டருக்கு மட்டும்தான். நூறு நாள்கள் கழிச்சுதான் ஓடிடியில் கொடுப்போம். இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்துல நடிக்க ஒப்புக்கொண்ட பார்த்திபன், விஜய் சேதுபதிக்கு நன்றி. கம்ப்யூட்டரைஸ்ட் டிக்கெட் உள்ள தியேட்டர்களுக்கு மட்டும்தான் இந்தப் படத்தை கொடுக்கப் போகிறோம்” என்றார்.
இதையும் படிங்க... திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடத்த உத்தரவு!