நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அதோ அந்த பறவை போல'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் எஸ்.வி. சேகர், பெண் கதாபாத்திரத்தை மையமாகவைத்து காட்டில் எடுக்கப்பட்ட கதைதான் 'அதோ அந்த பறவை போல'. இதுபோன்ற திரைப்படங்கள் தமிழ் திரை உலகில் வருவதற்கு இப்போதுதான் வாய்ப்பு வந்துள்ளது என்றார்.
மேலும் சினிமாவில் ஓடும் படம், ஓடாத படம் என இருவகைதான் உண்டு எனக்கூறிய எஸ்.வி. சேகர், ராமராஜன் பசுமாட்டை வைத்து பால் கறக்கும் படம் ஓடிவிட்டால் அதேபோல் பத்து படங்களை எடுப்பார்கள் ஏன் என்றால் அது வியாபாரம் எனக் குறிப்பிட்டார்.
அந்தக் காலத்தில் பத்து லட்சத்திலேயே படத்தை எடுத்துவிடுவார்கள் எனத் தெரிவித்த அவர், தற்போது ஒரு நாளைக்கு நாற்பது லட்சம் செலவாகிறது என்று கூறினார்.
அதேபோல், மற்ற தொழில்களில் முதலில் தொழிலை கற்றுக்கொண்டு உள்ளே வருவார்கள், ஆனால் சினிமாவில் மட்டும்தான் உள்ளே வந்தப் பிறகு தொழிலை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்றார்.
![S Ve Shekher speech on Atho Antha Paravai Pola audio launch](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-athoanthaparavaipola-svsekar-script-7204954_18012020224742_1801f_1579367862_933.jpg)
படம் குறித்து பேசுகையில், அமலா பால்தான் படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றும், சினிமாவிற்கு சென்சார் தேவையில்லை எனவும் எஸ்.வி. சேகர் குறிப்பிட்டார். மேலும், தொலைக்காட்சிக்குத்தான் சென்சார் தேவை என்பது தன் கருத்து என்று கூறிய அவர், இப்படம் சரியான நேரத்தில் வெளியாகி வெற்றி பெற வேண்டும் எனவும் வாழ்த்தினார்.
இதையும் படிங்க: ரௌடி பேபி பாடலுக்கு நடனமாடும் சாயிஷா பேபி