சென்னை: இந்தியத் திரையுலகில் 'பாடும் நிலா' என்று அனைவராலும் அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இதே செப்டம்பர் 25ல் கடந்த ஆண்டு காலமானார்.தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பி.
கடந்த வருடம் ஆகஸ்ட் 5ஆம் தேதி எஸ்.பி.பி.,க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனக்கு லேசான கரோனா தொற்றுதான் என்று தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை கூட வெளியிட்டார்.
அதற்குப் பிறகு சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14ஆம் தேதி மோசமடைந்தது. தொடர் சிகிச்சையால், அவருடைய உடல்நிலை தேறிவந்தது. இதனிடையே திடீரென்று செப்டம்பர் 24ஆம் தேதி உடல் நிலை மேசமடைந்து செப்டம்பர் 25ஆம் தேதி மதியம் ஒருமணியளவில் உயிரிழந்தார்.
எஸ்பிபியின் முதல் பாடல்
கரோனா கொண்டு சென்ற எங்களின் கொண்டாட்டம் நீங்கள். பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் எஸ்பிபி. பாடலுக்கு தகுந்தாற்போல் தனது குரலை மாற்றியமைத்து பாடுவதில் வல்லவர். பாடலின் இடையிடையே அவர் சிரிக்கும் அழகு கேட்போரை கிறங்கடித்துவிடும்.
1946ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூரில் பிறந்தார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். 1969ஆம் ஆண்டு வெளியான ‘சாந்தி நிலையம்’ படத்தில் இடம்பெற்ற ‘இயற்கை எனும்’ பாடல் எஸ்பிபியின் குரலில் பதிவு செய்யப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்று கூறப்படுகிறது. அந்த பாடல் வெளியாவதற்கு முன்பாகவே அவர் பாடிய ‘அடிமைப் பெண்’ திரைப்படம் வெளியானது. இதில் அவர் பாடிய ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் மிகவும் பிரபலம்.
தேசிய விருது நாயகன்
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, சிறந்த பாடகருக்கான தேசிய விருதை எஸ்பிபி ஆறு முறை வென்றுள்ளார். 1979ஆம் ஆண்டு வெளியான ’சங்கராபரணம்’ திரைப்படத்தில் ‘ஓங்கார நாதானு’ என்ற பாடலுக்காக முதல் தேசிய விருதை பெற்றார்.
அதன்பிறகு ‘ஏக் துஜே கே லியே’ படத்தில் இடம்பெற்ற ‘தேரே மேரே பீச் மெய்ன்’, ’சாகர சங்கமம்’ படத்தின் ‘வேதம் அனுவனுவுனா’, ’ருத்ர வீணா’ படத்தில் ‘செப்பலானி உன்டி’, 'சங்கீத சாகர கானயோகி பஞ்சாக்ஷர காவய்’ படத்தில் இடம்பெற்ற ‘உமந்து குமந்து கானா’, ‘மின்சார கனவு’ படத்தின் ‘தங்க தாமரை’ ஆகிய பாடல்கள் முறையே தேசிய விருதை வென்றுள்ளார்.
எஸ்பிபி, இளையராஜா காம்போ
2001ஆம் ஆண்டு, அவருக்கு பத்ம ஸ்ரீ விருதும், 2011ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டன. எஸ்.பி.பி., இளையராஜா காம்போவில் உருவான பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்.
எஸ்.பி.பி., சிறந்த பாடகருக்காக பெற்ற ஆறு தேசிய விருதுகளில் இரண்டு படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். எஸ்.பி.பி., போன்ற பாடகர் கிடைத்ததால், இளையராஜா பாடல்களில் பல புதிய முயற்சிகளை செய்து பார்த்தார். மாமன் ஒருநாள் (ரோசாப்பூ ரவிக்கைக்காரி), என் ஜோடி மஞ்சக் குருவி (விக்ரம்), ஆடி மாசம் காத்தடிக்க (பாயும் புலி), ராத்திரி நேரத்தில் (அஞ்சலி) உள்ளிட்ட பல பாடல்களில் எஸ்.பி.பி., வித்தியாசமாக குரலை மாற்றி பாடியிருக்கிறார்.
ரஜினியின் ஓபனிங் மாஸ் சாங் எப்போதுமே எஸ்பிபிதான் பாடியுள்ளார். அந்த வகையில் அண்ணாத்த படத்தில் ரஜினியின் ஓபனிங் சாங் எஸ்பிபிதான் பாடியுள்ளார். அவர் பாடியபடியே தேகம் மறைந்தாலும் தனது இசையால் எப்போதும் மலர்ந்துகொண்டே இருப்பார்.