பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (செப். 25) பிற்பகல் உயிரிழந்தார். அவருடைய மறைவிற்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என்று பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் எஸ்.பி.பி.யின் மறைவு குறித்து பின்னணி பாடகி எஸ். ஜானகி தனது சமூக வலைதளப்பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “ஆந்திராவில் நடந்த இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி.யை முதலில் சந்தித்தேன். அவர் சிறுவனாக இருந்தாலும் மிகத் திறமையாகப் பாடினார். அவரைப் பாராட்டி மிகப்பெரிய பாடகனாக வளர்வாய் என வாழ்த்தினேன்.
அதேபோல் அவர் திரையுலகில் மிகப்பெரிய பாடகராக உயர்ந்தார். என் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். நானும், அவரும் 80ஸ் மற்றும் 90களில் சேர்ந்து பாடிய பல பாடல்கள் ஒரேநாளில் ஒளிப்பதிவு செய்யப்பட்டன.
அது எதையும் என்னால் மறக்க முடியாது. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மிகவும் கலகலப்பாகவும், நகைச்சுவையாகவும் பேசி அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். அதை என்னால் மறக்க முடியாத ஒன்று.
எஸ்.பி.பி. மறைவு குறித்த தகவலை அறிந்த தருணம் முதல் என் மனநிலை இயல்பாக இல்லை. மனம் விவரிக்க முடியாத துயரத்தில் தவிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'எஸ்.பி.பி தன்மை மிகுந்த மாமனிதர்' - நடிகை ராதா இரங்கல்!