மும்பை: 'பாகுபலி' புகழ் இயக்குநர் ராஜமெளலியின் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நல்ல தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது.
இந்திய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை புரிந்த 'பாகுபலி' சீரிஸ் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி தற்போது 'ஆர்ஆர்ஆர்' என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் தெலுங்கு ஹீரோக்கள் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.
பிரமாண்டமாக உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்', 2021 ஜனவரி 8ஆம் தேதி வெளியாகும் என கடந்த சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து படத்தின் ரிலீஸுக்கு முன்பே பட்ஜெட்டை விட அதிக விலைக்குத் திரையரங்க வெளியீட்டு உரிமை விற்கப்பட்டு சாதனை புரிந்துள்ளது.
இந்தப் படம் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ரூ. 215 கோடி, கர்நாடகா மாநிலத்தில் ரூ. 50 கோடி, வெளிநாட்டு வெளியீடு உரிமையில் ரூ. 70 கோடி என வியாபாரம் ஆகியுள்ளது. இதை வைத்து பார்க்கையில் ரிலீஸுக்கு முன்பே படம் ரூ.400 கோடி வரை வியாபாரம் ஆகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
'பாகுபலி' சீரிஸ் திரைப்படங்கள் வட இந்தியாவிலும் நல்ல வசூலை ஈட்டியதால், அந்தப் பகுதியிலும் 'ஆர்ஆர்ஆர்' படத்தை அதிகளவில் விநியோகிக்க படத் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனராம்.
இந்தியா முழுவதும் 'ஆர்ஆர்ஆர்' படத்தைக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காகவே பாலிவுட் நடிகை ஆலியா பட் கதாநாயகியாகவும் அஜய் தேவ்கன் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்திலும் இயக்குநர் ராஜமெளலி ஒப்பந்தம் செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இவர்களுடன் ஒலிவியா மோரிஸ், அலிசன் டூடி, ரே ஸ்டீவென்சன் என சர்வதேச நடிகர்களும் முக்கிய கேரக்டரில் படத்தில் நடிக்கிறார்கள்.
10 மொழிகளில் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியாகவிருக்கும் நிலையில், ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாராகிவருகிறது. படத்தை டிவிவி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.வி.வி. தனய்யா தயாரிக்கிறார்.
ஆக்ஷன் கலந்த பீரியட் திரைப்படமாக உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்', ஆங்கிலேயர்கள், ஹைதராபாத் நிசாம் ஆகியோரை எதிர்த்து சண்டையிட்ட அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கோமாராம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கற்பனை கதை எனக் கூறப்படுகிறது.
படத்தில் கோமாராம் பீமாக ஜூனியர் என்டிஆரும், அல்லூரி சீதாராம ராஜுவாக ராம் சரணும் நடிக்கிறார்கள்.