தி ட்விலைட் சாகா திரைப்படம் மூலம் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் ராபர்ட் பேட்டின்சன். தற்போது வார்னர் பிராஸ் தயாரிக்கும் தி பேட்மேன் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தின் ட்ரெய்லரும் சமீபத்தில் நடைபெற்ற ’டிசி ஃபேன் டோம்’ நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டு ரசிகர்ளிடம் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், நடிகர் ராபர்ட் பேட்டின்சனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து வார்னர் பிராஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தி பேட்மேன் படத்தின் உறுப்பினர் ஒருவருக்கு COVID-19 உறுதியாகியுள்ளது. நிறுவனத்தின் நெறிமுறைபடி அந்நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தற்போது, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் ராபர்ட் பேட்டின்சனுக்கு தான் கரோனா தொற்று உறுதியானது என்பதைத் தெரிவிக்காமல் மறுப்பு தெரிவித்து விட்டார்கள்.
இருப்பினும், அமெரிக்க ஊடகங்கள் ராபர்ட் பேட்டின்சனுக்கு தான் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ளன.
இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஜூன் 2021இலிருந்து, 2021ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.