ட்வைலைட் சீரிஸ், லைட் ஹவுஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றவர், நடிகர் ராபர்ட் பேட்டின்சன். டெனெட், த பேட் மேன் என இவரது நடிப்பில் அடுத்தடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் திரைப்படங்கள் வெளிவரவுள்ளன.
பிரிட்டிஷ் நடிகரான பேட்டின்சன், தற்போதைய கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, அனைவரையும் போல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
ஹாலிவுட் தொடங்கி, கோலிவுட் வரை பல்வேறு நடிகர் நடிகைகளும் தங்கள் அன்றாட வேலைகள், சமையல் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் காணொலிகள், இணைய நேர்காணல்களை வழங்கி வரும் நிலையில், சக நடிகர்களைப்போல் தன்னுடைய குவாரன்டைன் குக்கிங் திறமையை நேர்காணல் ஒன்றில் வெளிப்படுத்தியபோது, மைக்ரோவேவ் அடுப்பை கவனக்குறைவாக வெடிக்கவிட்டு அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளார், பேட்டின்சன்.
பிரபல இதழ் ஒன்றுக்கு ஃபேஸ்டைம் நேர்காணல் வழங்கிய பேட்டின்சன், பிட்ஸா, பர்கரைப் போல் கைகளாலேயே எடுத்து உண்ணும்படியான பாஸ்தாவைத் தயாரிக்க முயன்றுள்ளார்.
முதலில் தன்னுடைய கையுறைகளை எரித்துக் கொண்ட பேட்டின்சன், தொடர்ந்து பாஸ்தாவுக்கான பொருட்களைத் தயார் செய்து மின் அடுப்பில் வைத்துவிட்டு சிறிது தூரம் நகர்ந்ததும் அடுப்பில் தீப்பொறிகள் ஏற்பட்டு, வெடித்துள்ளன. இந்தச் சம்பவத்தின் போது பேட்டின்சன் அச்சப்படாமல், சிரித்தபடியே 'இதுதான் தான் சமைத்த உணவு’ என அறிமுகப்படுத்தி விட்டு, வேகமாக நகர்ந்துள்ளார்.
பொதுவாக 'ப்ராங்க்' எனப்படும் மற்றவரை ஏமாற்றும் செயல்களுக்கு பெயர் போனவர் பேட்டின்சன் என்பதால், இது விபத்தா அல்லது பேட்டின்சன் வேண்டுமென்றே நிகழ்த்திய ப்ராங்கா... என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
இதையும் படிங்க : 'இது மாளிகையா இல்ல வீடா'- சோனம் கபூர் வீட்டை பார்த்து வாய் பிளந்த நெட்டிசன்கள்!