ரேடியோவில் தனது தனித்துவமான நகைச்சுவை மூலம் ரசிகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த ஆர்.ஜே.பாலாஜி, தற்போது நடிகர், இயக்குநர், கிரிக்கெட் வர்ணனையாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவராக வலம்வருகிறார்.
“ஹலோ கோயம்புத்தூர்” என்ற பெயரில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி தனக்கு என ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இதனையடுத்து தெரியாத ஒரு நபருக்கு போன் செய்து கலாய்க்கும் ’கிராஸ் டாக்’ நிகழ்ச்சியில் மூலம் நன்கு பிரபலமானார்.
படிப்படியாக தனது கடின உழைப்பால் ’தீயா வேலைசெய்யணும் குமாரு’ படத்தில் கர்ணா கதாபாத்திரம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே தனது நக்கலான நகைச்சுவை மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
இதனையடுத்து பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகர், கதாநாயகனின் நண்பராக நடித்து வந்த இவர், கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான எல்.கே.ஜி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஒரு சாதாரண நபர் எப்படி முதலமைச்சராகிறார் என்பதை நகைச்சுவை கலந்த பாணியில் மக்களிடம் தனது நடிப்பின் மூலம் கொண்டு சேர்த்தார்.
தொடர்ந்து நடிப்பதைத் தாண்டி முதல்முறையாக இயக்குநராகக் கடந்த ஆண்டு அறிமுகமானார். அதுவும் முதல் படத்தையே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து இயக்கினார். ’மூக்குத்தி அம்மன்’ எனப் பெயரிட்டுள்ள இந்த படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார்.
இப்படி பல்வேறு திறமைகளை தனக்குள் அடுக்கி வைத்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி இன்று(ஜுன்.20) 36ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதற்கு சமூக வலைதளங்கள் மூலமாகப் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ’ஷெர்னி’ பட அனுபவத்தை பகிர்ந்து கொண்ட வித்யா பாலன்