தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு தனி பாணி இருக்கும். ஸ்ரீதர் என்றால் காதல், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்றால் ஃபேமிலி, ஏ.பி. நாகராஜன் என்றால் பக்தி என்று தொடங்கி இப்போது உள்ள இயக்குநர்கள் வரை ஒவ்வொருவருக்கும் தனித்தனி முத்திரைகள் இருக்கும். ஆனால் கே.பாலச்சந்தர் எல்லா முத்திரைகளுக்கும் சொந்தக்காரர் என்றுதான் சொல்ல வேண்டும்.
’இயக்குனர் சிகரம்’ என்று புகழப்படும் பாலசந்தரின் படங்கள் பிடிக்காதவர்கள் எவரேனும் உண்டோ என்று தெரியவில்லை. அவரது பெரும்பான்மையான படங்கள் நல்லதொரு பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளன. அவரது படங்கள் மட்டுமே ஒவ்வொன்றும் வேறு வேறு தளங்களில் இருக்கும். அதே போல் எந்தக் கதை எடுத்தாலும் மிக ஆழமாக உள்ளே சென்று ஆராய்ந்து படம் எடுத்து, நம்மை அந்தப் படத்தின் வழி வாழச் செய்பவர் கேபி என்று சொன்னால் மிகையல்ல.
மிக ரிஸ்க்கான கதைகளைக் கூட மிக எளிதாக கையாளக்கூடியவர் இயக்குனர் சிகரம். அதுமட்டுமின்றி அவரால் அறிமுகம் செய்யப்பட்ட நட்சத்திரங்கள் அநேகம். அதில் கமல், ரஜினி இருவரையும் தமிழ்த் திரையுலகம் உள்ள வரை பெருமையுடன் சொல்லலாம். அவர் படங்களில் பெண் கதாபாத்திரங்கள் இதுவரை எந்த சினிமாவிலும் கையாளப்படாத வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பார்கள்.
இத்தகைய சிறப்புகளையெல்லாம் கொண்ட கே.பாலச்சந்தர், கடந்த 2014ஆம் ஆண்டு தனது 84ஆவது வயதில் இதே நாளில் உயிரிழந்தார். அவர் இல்லை என்றாலும் அவரது படங்கள் வழியாக அவரின் நினைவுகள் இருந்துகொண்டே தான் இருக்கும்.
இதையும் படிங்க...பாலிவுட்டில் அறிமுகமாகும் அமலாபால்!